இன்று ஒட்டு மொத்த உலகத் தமிழரும் கொண்டாடக் கிடைத்திருக்கிற ஒரு நல்ல செய்தி, கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை உலக தலைமை பண்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டிருப்பதாகும். 27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை மற்றும் நாஸ்டாக் தலைவர் அடெனா ப்ரைட்மேன், ஆகியோர் உலக தலைமை பண்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாஷிங்டன் நிறுவனமான, ‘அமெரிக்க இந்திய வணிகக் குழுமம்’ கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக 30 பிரிவின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை வழங்கி வருகிறது. உலக பொருளாதார முன்னேற்றத்திற்காக முயற்சிகளை மேற்கொண்ட தலைமைகளுக்கும், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வணிக ரீதியான தொடர்பை அதிகப்படுத்துபவர்களுக்கும் உலக தலைமை பண்பாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான உலக தலைமை பண்பாளர் விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அடெனா ப்ரைட்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் எண்ணிமப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், பெரும்பாலான இந்தியர்கள் தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு சுந்தர் பிச்சை முயற்சி எடுத்துவருவது சிறப்பானது என பெருமிதம் தெரிவித்தார் ‘அமெரிக்க இந்திய வணிகக் குழுமத்தின்’ தலைவர் நிஷா பிஸ்வால். மேலும், இந்தியா மட்டுமல்லாது, 50 நாடுகளின் பங்குச்சந்தை வர்த்தகத்தை நாஸ்டாக் தலைவர் அடெனா ப்ரைட்மேன் உயர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிறந்த சுந்தர் பிச்சை, உலக அளவில் சிறப்பாக செயல்பட்டு பல விருதுகளை வாங்குவது தமிழர் பெருமிதம். நாமும் பாராட்டுவோம் வானளாவ! வாழ்த்துக்கள் சுந்தர்பிச்சை அவர்களே! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,179.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



