Show all

தமிழர் பெருமிதம்: 11 அகவை தமிழ்ச் சிறுமி அரிப்பிரியா! அறிஞர் ஐன்ஸ்டீனை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்று சாதனை

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை பிரிட்டனில் வாழும் அரிப்பிரியா என்னும் 11 அகவை தமிழ்ச்சிறுமி பெற்றுள்ளார்.

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று, பிரிட்டனில் வாழும் அரிப்பிரியா என்னும் 11 அகவை தமிழ்ச்சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.

கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் பதினோரு அகவையே ஆகும் அரிப்பிரியாவை பிபிசி தமிழ் நேர்காணல் செய்தது.

ஒருவரது அறிவுக்கூர்மையை அளவிடுவதற்கு பல்வேறு விதமான சோதனைகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது நாடுக்கு நாடு அல்லது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. இங்கு அறிவுக்கூர்மை என்பது ஒரு விடயத்தை எவ்வளவு விரைவாக உள்வாங்கிக் கொள்வது என்பது மட்டுமின்றி, சிக்கல்களை தீர்ப்பதில் மூளையின் செயல்பாட்டு திறனை அடிப்படையாக கொண்டுள்ளது.

அதன்படி, உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் பிரிட்டிஷ் மென்சாவின், அதற்கான தேர்வில் பங்கேற்ற பிரிட்டன்வாழ் தமிழ்ச் சிறுமியான அரிப்பிரியா, அத்தேர்வின் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

அதாவது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இவர் இரண்டு எண்கள் அதிகமாக பெற்றுள்ளார். அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்விலும் அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார்.

அரிப்பிரியாவின் அசாத்திய திறமை குறித்து எந்த அகவையில் தெரியவந்தது என்று காரைக்குடியை பூர்விகமாக கொண்ட அவரது தாயார் கிருஷ்ணாம்பாள் விளக்கும் போது, ‘எனது கணவரது வேலையின் காரணமாக அரிப்பிரியா அவளது மழலை கால கல்வியை பெங்களூருவில் பயின்றாள். அவளுக்கு சுமார் நான்கு அகவை இருக்கும்போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல நேரிட்டது. இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில், பாடத்தை ஆஸ்திரேலியாவில் இருந்தவாறே படித்தாள். பின்பு நானும் எனது மகளும் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பியபோது, நேரடியாக பள்ளியின் அரையாண்டுத் தேர்வை எழுதி, அதில் மற்ற மாணவர்களை விட நல்ல மதிப்பெண்களைப் எடுத்து ஆச்சர்யப்படுத்தினாள்.

அதேபோன்று, தமிழ் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளையும் வெகுவிரைவில் கற்றுக்கொள்ள தொடங்கியதுடன், நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்தவுடனேயே ஆங்கிலத்தில் எவ்வித சிரமமும் இல்லாமல் உள்நாட்டு மாணவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு வருகிறாள்" என்று கூறுகிறார்.

அரிப்பிரியா அவரது அகவை சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது, எந்த வகையில் வேறுபட்டவர் என்று கிருஷ்ணாம்பாள் தெரிவிக்கும் போது ‘தற்போது ஆறாவது வகுப்பு படித்து வரும் அரிப்பிரியா பள்ளிக்கல்வியில் முதன்மையான நிலையை பெறுவது என்பது வழக்கமான ஒன்று; ஆனால், அதற்கு அவள் செலவிடும் நேரமோ மிகவும் குறைவானது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அவள் பள்ளிப் படித்தாலே அது மிகப் பெரிய விடயம். பள்ளித் தேர்வுகளை எவ்வித பதற்றமும் இல்லாமல் எப்போதும்போல் எதிர்கொள்வாள்.

இதை தவிர்த்து, நாங்கள் நாடு விட்டு வந்து வாழ்ந்தாலும் எங்களது மொழி, பண்பாடு மற்றும் கலாசார அடையாளத்தை இழந்துவிட கூடாது என்பதால் ஒவ்வொரு நாளும் தமிழ் மொழி, கர்நாடக சங்கீதம், இசை, தமிழர் தம் ஆடற்கலை என்கிற பரத நாட்டியம் போன்றவற்றை கற்றுவருவதுடன் அதில் சிறந்த நிலையையும் பெற்று வருகிறார். குறிப்பாக, ஐரோப்பாவிலுள்ள 84 நாடுகளில் நடத்தப்படும் தமிழ் மொழித் தேர்வுகளில் இரண்டாண்டுகள் சிறப்பு நிலையை பெற்று பரிசு பெற்றுள்ளார். மேலும், கூடைப்பந்தாட்டம், ஹாக்கி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் பங்கேற்று வருகிறார்" என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.

பிரிட்டனின் உளவு நிறுவனமான எம்ஐ6 இல் இணைந்து பணியாற்றுவதே தனது நோக்கம் என்று கூறுகிறார் அரிப்பிரியா: நான் இன்னும் சிறு அகவையில் மருத்துவராகவும், ஆசிரியாகவும் அல்லது விண்வெளி வீராங்கனையாகவும் விளங்க விரும்பிய நிலையில், அண்மைக் காலமாக உளவு சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து வருவதால் எம்ஐ6 உளவு அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். எதிர்காலத்தில் இதுகூட மாறுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எதை செய்வதாக உறுதிபட முடிவெடுக்கிறேனோ அதில் நான் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனின் ரெட்டிங் பகுதியில் வசித்து வரும் அரிப்பிரியாவுக்கு அங்குள்ள நாட்டின் மிகப் பெரிய பள்ளியில் தனது கல்வியை தொடருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் தனது நுழைவிசைவு (விசா) முடிவடைய உள்ளதால் இங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அரிப்பிரியாவின் அப்பா இராதாகிருஷ்ணன் கூறுகிறார். ‘இங்கிலாந்தின் முதல் மூன்று இடங்களில் உள்ள கென்ட்ரிக் எனும் பெண்கள் பள்ளியின் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள அரிப்பிரியா இரண்டு மாதங்களில் தொடங்கும் ஏழாம் வகுப்பை அங்கு தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், எனது ஐந்தாண்டுகால நுழைவிசைவு வரும் அடுத்த மாதம் முடிவுறுவதால் பிரிட்டனிலிருந்து குடும்பத்துடன் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த சில காலமாக இருந்தும் வரும் நிலையற்ற அரசியல் சூழ்நிலையின் காரணமாக மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறோம். எது என்னவோ, நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அசாத்திய திறமையை கொண்டுள்ள அரிப்பிரியாவுக்கும், நான்கு அகவையுள்ள எனது மகன் ஜெகதீசுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களை சாதிக்க வைப்பதே எங்களது ஒரே எண்ணம்’ என்று கூறுகிறார் இராதாகிருஷ்ணன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,228.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.