15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபது நாடுகளின் நிதி அமைச்சர்களினதும் மத்திய வங்கி ஆளுநர்களினதும் அமைப்பு என்பதுதான் ஜி-20 என்பதாகும். நோக்கம் உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி. அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்த பொருளியல் கூட்டமைப்பு கூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85விழுக்காடும், உலக வணிகத்தில் 80விழுக்காடும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது. அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர். இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியத் தலைமைஅமைச்சர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,988.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.