நான் அதிபர் ஆனால் இந்தியா - அமெரிக்கா நெருங்கிய நட்பு நாடுகளாகும் என்று டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார். அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் பிரபல தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் நிறுத்தப்பட்டு உள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம்(நவம்பர்) 8-ந்தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் கருத்துப் பரப்புதல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இருவரும் அனல் பறக்கும் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெச் 1-பி விசா, அவுட்சோர்சிங் ஆகிய இரு விஷயங்களை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அம்சங்களாகப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், நான் அதிபர் ஆனால் இந்தியா - அமெரிக்கா நெருங்கிய நட்பு நாடுகளாகும் என்று பேசிஉள்ளார். நியூஜெர்சியில் குடியரசு இந்து மத கூட்டணி ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிரம்ப் பேசுகையில், டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் நாம் (அமெரிக்கா-இந்தியா) மிகவும் நெருங்கிய நண்பர்களாக போகிறோம். என்று கூறிஉள்ளார். நாம் இருவரும் ஒரு தனி எதிர்காலத்தை கொண்டிருக்க போகிறோம் என்று கூறிஉள்ள டிரம்ப் பிரதமர் மோடியை பாராட்டிஉள்ளார். பிரதமர் மோடி தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை விரைவு வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து செல்கிறார். பிரதமர் மோடியுடன் இணைந்து பணிபுரிய நான் எதிர்நோக்கி உள்ளேன். பிரதமர் மோடி மிகவும் சுறுசுறுப்பானவர் என்று டிரம்ப் கூறிஉள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முதல்முறையாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். நான் இந்து மதத்தின் மிகப்பெரிய விசிறியாவேன். நான் அதிபர் ஆனால் இந்தியர்கள் மற்றும் இந்து சமூகத்தினர் வௌ;ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பரை கொண்டிருக்க முடியும். நான் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து உள்ளேன் என்றும் டிரம்ப் கூறினார். காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் வங்கதேசத்தில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்துகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் பங்கை பாராட்டினார். அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் உள்ள நெருங்கிய நட்புநாடான இந்தியாவை பாராட்டுகிறோம் என்ற டிரம்ப், இந்த வார்த்தையை ஹிலாரி பயன்படுத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்தார். இந்தியா மிகவும் பயங்கரமான பயங்கரவாத தாக்குதல்களை பார்த்து உள்ளது. மும்பை நான் விரும்பும் ஒருநகர். இந்தியாவில் நடைபெற்ற தாக்குதலானது முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று டிரம்ப் குறிப்பிட்டார். 5000 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு உறுதியளித்த டிரம்ப், நான் அதிபர் ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட இந்தியாவிற்கு அமெரிக்கா தோள் கொடுக்கும். இந்தியா மிகவும் முக்கியமான கூட்டணி நாடாகும், இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பையும் வலிமைப்படுத்த முன்னோக்கி இருக்கின்றேன் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



