05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச அறங்கூற்றுமன்றம் செயல்படுகிறது. 15 அறங்கூற்றுவர்கள் பணியிடங்களைக் கொண்ட இந்த அறங்கூற்றுமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 அறங்கூற்றுவர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஐ.நா. பொதுஅவையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து இந்த அறங்கூற்றுவர்களை தேர்வு செய்வார்கள். அவ்வகையில் இந்த ஆண்டு 5 அறங்கூற்றுவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பிரேசில், லெபனான், பிரான்ஸ், சோமாலியா நாடுகளில் இருந்து தலா ஒரு அறங்கூற்றுவர் தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள ஒரு அறங்கூற்றுவர் இடத்துக்கு சர்வதேச அறங்கூற்றுமன்றத்தில் ஏற்கனவே அறங்கூற்றுவராக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரியை (அகவை 70) இந்தியா மீண்டும் வேட்பாளராக நிறுத்தியது. பிரிட்டனைச் சேர்ந்த கிரீன் உட்டும் (அகவை 62) களமிறக்கப்பட்டார். இவர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது. இந்நிலையில், பிரிட்டன் தனது வேட்பாளரை கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது. பிரிட்டன் தனது வேட்பாளரை திரும்ப பெற்றதால் இந்தியாவின் தல்வீர் பண்டாரி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சர்வதேச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார். ஐ.நா.வின் மிகவும் சக்தி வாய்ந்த இந்த சர்வதேச அறங்கூற்றுமன்ற வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் அறங்கூற்றுவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,613
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



