Show all

அமெரிக்கா எச்சரிக்கை! உருசியாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவிற்கு, காட்சா சட்டத்தின் கீழ் பொருளாதார தடை

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் வகையில் 'காட்சா' என்ற சிறப்பு சட்டத்தை அமெரிக்கா இயற்றி இருக்கிறது. 

இந்தச் சட்டத்தின் அடிப்படையில், சீனாவின் மீது அமெரிக்கா நடவடிக்கையையும் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவுடன், சீனாவும், உருசியாவும் மோதல் போக்கு ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவும் உருசியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குகிறது. 

நானூறு கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

விமானப்படை தளபதி தனோவா பேசுகையில், ரபேல் விமானங்களை தவிர உருசியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளும் நடுவண் அரசு கொள்முதல் செய்கிறது. ரபேல் போர் விமானங்களும், எஸ்-400 ரக ஏவுகணைகளும் விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் என்று கூறியிருந்தார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வந்துள்ள நிலையில் இருதரப்பு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் உருசியாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்–400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் திட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தாவது:   உருசியாவுடன் வர்த்தக பரிமாற்றங்களை செய்தால், காட்சா சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எங்கள் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுக்கு தெரிவித்து உள்ளோம். எஸ்–400 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வது, காட்சா சட்டத்தின் 231–வது பிரிவின் கீழ் பொருளாதார தடைக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,930.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.