Show all

பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல்! ராஜபக்சே ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் வெறிச்செயல்.

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல்!

இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று  ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  இதை ஏற்க மறுப்பதாக அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் அறிவித்தனர்.

இந்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது.  பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக பேரவைத்தலைவர் அறிவித்ததை தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவு உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றனர். அப்போது உரையாற்றிய ராஜபக்சே, நான் சிறு வயதிலிருந்தே பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். அமைச்சர் பதவிக்காகவோ, தலைமைஅமைச்சர் பதவிக்காகவோ நான் அவைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஆவேசமாக குறிப்பிட்டார்.

அவரது பேச்சில் உணர்ச்சி வயப்பட்ட ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவேசத்துடன் பேரவைத் தலைவர் கரு ஜெயசூர்யா அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று அவரை தாக்க முயன்றதால் பாராளுமன்றத்தில் கூச்சலும், குழப்புமும் நிலவியது. 

பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா எல்லோரையும் அவர்கள் இருக்கையில் அமரும்படி கூறினார். ஆனால் அவரிடமும் ராஜபக்சே ஆதரவாளர்கள் சண்டையிட்டனர். இதில் அவர் ராஜபக்சே ஆதரவு பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,972.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.