அமெரிக்காவில் ஆசியக்கழகத்தில் ராஜ்நாத் சிங் இரபேல் குறித்து பெருமிதம். (இராகுல் காந்தி பாஜகவைத் தாக்கி வந்த) இரபேல் போர் விமானத்தை கொண்டு இனி இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தானின் பயங்கரவாத முகாமை தாக்கலாம் என இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா, அமெரிக்கா இடையே அமைச்சர்கள் மட்டத்திலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, ஆசியக்கழகம் என்ற கல்வி அமைப்பில் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடுவே பேசியதாவது: இந்தியாவின் ராணுவ வலிமை அதிகரித்து வருகிறது. பாக்கிஸ்தானில் உள்ள ராணுவத் தளங்களையும் இந்தியா அழித்திருக்க முடியும். ஆனால், அதில் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால், பயங்கரவாத முகாமை மட்டும் குறிவைத்து தகர்த்தோம். அதுவே எங்களின் குணம். இந்திய ராணுவம் முதல் இரபேல் போர் விமானத்தை பெற்றுள்ளது. பயங்கரவாத முகாமை அழிக்க வேண்டும் எனில், இனி பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல வேண்டியதில்லை. இந்தியாவில் இருந்தே தாக்கி அழிக்கலாம். பாக்கிஸ்தானுடன் இந்தியா எப்போதும் சுமூக உறவையே நாடியது. ஆனால் பதிலுக்கு கார்கில் போரை கொடுத்தனர். அதேபோல், தலைமைஅமைச்சர் மோடியும் பாக்கிஸ்தானுடன் சுமூக உறவை விரும்பினார், பதிலுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என அனைவரும் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,368.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



