பாஜகவும் காங்கிரசும் ஒன்றே தான். இந்தியாவில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேவை குறைந்துவிட்டது. தமிழகத்தில் பாஜகவிற்கான தேவை இல்லை. இந்த இரு கட்சிகளின் பெயர்கள்தான் வேறு வேறு. கொள்கைகள் ஒன்றுதான் என்கிறார் சீமான். 03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் விடுதலைக்காக, ஆங்கிலேயர் ஆதிக்கப்பாட்டிற்கு எதிராக கப்பல் ஓட்டிய தமிழறிஞர், நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 84-ம் ஆண்டு நினைவுநாள் இன்று. வ.உ. சிதம்பரனாரின் 84-ம் ஆண்டு நினைவுநாளை யொட்டி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் வ.உ. சிதம்பரனார் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அகவணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசானது நாங்கள் சொல்வதை மட்டும் நீங்கள் கேட்க வேண்டும் என்கிற போக்கையே கடைபிடிக்கிறது. நீட் தேர்வில் வடமாநிலங்களில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். 13,000 பேர் தேர்வு எழுதினால் 85,000 பேர் தேர்ச்சி பெற்றதாக சொல்கிறீர்கள். புரட்சி என்பது புதிய சமூகத்தைக் கட்டமைப்பதுதான் என்கிறார் பகத்சிங். இந்த சமூகம் வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா என்பது ஹிந்தி பேசக் கூடிய மாநிலங்கள் மட்டுந்தானா? ஒன்றிய அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் படிக்க முடியாது என்கிற நிலை உள்ளது. அந்த ஒன்றிய அரசுக்கு என்று தனியே நிதி உள்ளதா? அது மாநிலங்கள் கொடுக்கிற நிதி. எங்கள் நிலத்தில் உள்ள கல்வி நிலையத்தில் எங்கள் தாய்மொழியை படிக்க முடியாது என்றால் எப்படி ஏற்பது? தமிழகத்தில் நாங்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் இப்படி எல்லாம் சொல்லிவிட முடியுமா? நீங்கள்தான் பள்ளிகளை நடத்திவிடவும் முடியுமா? இந்தியாவிடம் இராணுவ பயிற்சியை பெற்று ஈழத் தமிழரை இலங்கை ராணுவம் கொன்று அழித்துவிட்டது. அடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை அழிக்கத்தான் இப்போதும் இந்தியாவிடம் இலங்கை இராணுவம் பயிற்சி பெற்று வருகிறது. பாஜகவும் காங்கிரசும் ஒன்றே தான். இந்தியாவில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேவை குறைந்துவிட்டது. தமிழகத்தில் பாஜக தேவை இல்லை. இந்த இரு கட்சிகளின் பெயர்கள்தான் வேறு வேறு. கொள்கைகள் ஒன்றுதான். தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவை கழற்றிவிட வேண்டும். அதேபோல திமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட வேண்டும். எதிர் வரும தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன். அதுபற்றி அப்புறம் யோசிப்போம். இவ்வாறு சீமான் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



