Show all

மக்களிடம் மன்னிப்பு கேட்டு இரஜினிகாந்த் அறிக்கை! கட்சி தொடங்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை

நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்- கட்சி தொடங்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து, மக்களிடம் மன்னிப்பு கேட்டு இரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தன்னை நம்பி என்னுடன் வருபவர்களை, பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும், உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் நடிகர் இரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தை மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. 

இரஜினிகாந்தும் தனது எண்ணத்தை கீச்சு மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். கட்சி தொடங்குவது உறுதி என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரஜினிகாந்த், குணமடைந்து வீடு திரும்பினார். ரஜினிகாந்த் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 

இரஜினியின் மகள்களும் ‘கட்சி வேண்டாமே அப்பா’ என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் இரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். என்னை வாழ வைக்கும் கொண்டாடிகள் என்னுடைய முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இரஜினிகாந்த் தனது உருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.