தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளில் தமிழக ஆளுநர், முதல்வர், ஒன்றிய பாஜக அரசு ஆகியோர் ஒரு கமுக்கக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 விழுக்காட்டு இடஒதுக்கீடு சட்ட வரைவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடாவடியாக முன்னெடுக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டவரைவுக்கும் எதிர்நிலை வேண்டாம் என்பதாக- உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று திமுக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க ஸ்டாலின் தனது கீச்சு மற்றும் முகநூல் பதிவில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டவரைவுக்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்! தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளில் தமிழக ஆளுநர், முதல்வர், ஒன்றிய பாஜக அரசு ஆகியோர் ஒரு கமுக்கக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 விழுக்காட்டு இடஒதுக்கீடு சட்ட வரைவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் - நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டவரைவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தூங்குகிறவனை எழுப்பலாம்; தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது என்கிற தமிழ்ச் சொலவடையை நிரூபிக்க முயலவேண்டாம் என்று, அரசுப் பள்ளி மாணவர்களின் நன்மை பாராட்டி, ஆளுநரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.