Show all

மறையவில்லை இளங்குமரனார், தமிழர் மனங்களில் தொடர்ந்து வாழ்வார்! முதல்வர் ஸ்டாலின், பேரறிமுகங்கள், தமிழ் ஆர்வலர்கள் தமிழ்வணக்கம்

முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவுக்கு தமிழகம் முழுவதும் தமிழ் அறிஞர்களாலும், அரசியல் கட்சித் தலைவர்களாலும் இரங்கல் தமிழ்வணக்கமாகத்  தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், இளங்குமரனார் தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்று இரங்கல் தெரிவித்துள்ளார். இளங்குமரனார் உடலுக்குப் போடப்பட்ட திருக்குறள் மாலை காண்போர் நெஞ்சத்தை நெகிழ வைத்து, தனி மரியாதை பெற்றது.

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழறிஞர் இளங்குமரனார் பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர்.

இளங்குமரனார் தனது 94வது அகவையில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இளங்குமரனார் மறைவிற்கு, தமிழறிஞர்கள் அரசியல் பேரறிமுகங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “செந்தமிழந்தணர், என் ஆசான் திருமிகு இரா.இளங்குமரனார் முதுமையால் மதுரையில் மறைந்தார். இளம் அகவையிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கைத் தொடங்கி, தானே பயின்று புலவர் பட்டம் பெற்று, உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராக, மேல்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராக, தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞராகச் சிறக்கப்பணியாற்றிய செம்மல் அவர்.

பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார். திருநகரில் பாவாணர் நூலகத்தையும் திருச்சிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலையையும் அமைத்தவர்.

அதிர்ந்து பேசா பண்பாளர், ஆய்ந்துபேசும் அறிஞர், எழுத்தாளராக வாழ்வதற்காக அரசுப்பணியைத் துறந்தவர், கண்பார்வை இழந்தாலும் தனது எழுத்துப்பணி தடைபடக்கூடாது என்பதற்காக கண்களை மூடியெழுதிப் பழகியவர். திருக்குறளுக்கு உரையை திருக்குறளிலேயே தேடவேண்டுமென வலியுறுத்திய குறளாசன். குறள்வழித் திருமணம், புதுமனை புகுவிழா என குறளியத்தை வாழ்வியல் நெறியாக வகுத்து வாழ்ந்து காட்டியவர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் முதன்முதலாகப் பெண்ணொருத்தியால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை - அது மறைந்துவிட்டது என்று தமிழறிவுலகம் கருதியவேளையில், கண்டெடுத்து தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கிய தமிழ்ப்பாட்டனார் எங்கள் இளங்குமரனார். என அவரைப்பற்றிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் விண்மீன்களாய் மனவானில் ஒளிவிடுகின்றன. அவரது இழப்பை மனம் ஏற்கமறுக்கிறது. ஆனால், இயற்கையின் கட்டளையை ஏற்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் இரங்கலில், தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை, அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காக தனது 94-வது அகவையிலும் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார்.

தமிழ்மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன், வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி, வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர். கருணாநிதி குமரி முனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மகத்தான நிகழ்வில், இளங்குமரனார் பங்கேற்று உரையாற்றியது தனிச்சிறப்பாகும்.

வடமொழி - பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கும் முனைப்புடன், சமஸ்கிருத மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து, 4,000-க்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும், தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் இளங்குமரனார்.

அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தமிழ் தழைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பழந்தமிழர் வாழ்வியல் அடிப்படையில் உடல்நலன் காக்கும் முறைகளையும் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து, நலவாழ்வு வாழ்ந்து, அவற்றை இன்றைய இளைஞர்களும் பின்பற்றும் வழிமுறைகளைக் கற்றுத் தந்தவர்.

இளங்குமரனாரின் உடை போலவே அவரது உள்ளமும் தூய்மையானது. அயராது அவர் மேற்கொண்ட தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது.

இளங்குமரனாரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ச்சான்றோர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் போல என்றென்றும் நிலைத்திருக்கும் இளங்குமரனாரின் இறவாப் புகழ்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார் மறைவைத் தொடர்ந்து, மதுரை திருநகர் ராமன் நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்களின் வீர வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரில் வீர வணக்கம் செலுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் மலர்மாலைகளால் வணக்கம் செலுத்திய நிலையில், தமிழன்பர் ஒருவர் 1330 திருக்குறளையும் அதன் பொருளையும் தனித்தனித் தாள்களில் எழுதி அதையே மாலையாகக் கட்டி இளங்குமரனாரின் உடலுக்கு மாலையாக அணிவித்தார்.

தொடர்ந்து ஏராளமான மாலைகள் விழுந்ததால், அவ்வப்போது மலர் மாலைகளை அகற்றி வேறிடத்தில் குவித்து வைத்துக்கொண்டே இருந்தார்கள் உறவினர்கள். ஆனால், அந்த திருக்குறள் பாமாலையை மட்டும் கடைசி வரையில் அகற்றவே இல்லை. அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் தமிழ் வணக்கம் செலுத்த வந்தபோது பிற மாலைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

அப்போதும் கூட அந்த திருக்குறள் மாலையை அகற்றாமல், இளங்குமரனார் தலைக்கு அருகே அதனை வைத்திருந்தார்கள். மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக உடல் எடுத்துச் செல்லப்படும் வரையில், அந்த திருக்குறள் மாலை அய்யாவின் உடலை அணி செய்துகொண்டிருந்தது.

இது குறித்து, இளங்குமரனாரின் மூத்த மகன் இளங்கோவன் கூறுகையில், ‘அய்யா தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் தன்னுயிர் போல போற்றினாலும், திருக்குறள் மீது தனிப்பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் எழுதிய 600 நூல்களில் பெரும்பாலானவை திருக்குறள் தொடர்பானவை தாம்.

அகர முதலாம் ஆதியே போற்றி, மலர்மிசை ஏகும் மானடி போற்றி, தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி’ என்று திருக்குறள் போற்றி பாடலையும் இயற்றியுள்ளார். ஒட்டுமொத்த திருக்குறள் நூலையும் சுருக்கி ஒரே வரியில், ‘அறத்தால் பொருள் ஈட்டி இன்பமுடன் வாழ்க!’ என்று வாழ்த்தும் வழக்கமும் அவரிடம் இருந்தது.

தன்னுடைய எழுதும் மேசையில் கூட திருவள்ளுவர் மரச் சிற்பத்தை மட்டுமே அவர் வைத்திருந்தார். அவர் உயிராக நேசித்த திருக்குறளே மாலையாக வந்ததால், அதனை கடைசி வரையில் அவரது உடலில் இருந்து அகற்றாமல் வைத்திருந்தோம்’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.