19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டியை சேர்ந்த சுரேஷ், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை ஆற்றில் கோவிந்தநகரம், அம்பாசமுத்திரம், அணைப்பட்டி, சோழவந்தான், பரமக்குடி, உரப்புளி, மந்திவலசை, அரசரடி தொழுவலூர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆனால், இவற்றை பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்கவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்ட மூலவைகையாற்று பகுதியில், கடமலை மயிலை ஒன்றியத்தில், வருசநாடு முருக்கோடை பகுதியில் மொட்டைப்பாறை என்ற இடத்தில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த சில கிழமைகளுக்கு முன் பெய்த மழையால், மொட்டப்பாறை தடுப்பணை சில நாட்களுக்கு முன் உடைந்தது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம். எனவே, சுற்றுப்பகுதி மக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் அதை சீரமைத்து, உரிய தண்ணீரை சேமிக்கவும், வைகையில் உள்ள அனைத்து தடுப்பணைகளையும் உடனடியாக பலப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு அறங்கூற்றுவர்கள் டி.ராஜா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அறங்கூற்றுவர் டி.ராஜா, ஐம்பத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பு காமராசர் காலத்தில் கட்டப்பட்ட வைகை அணை, தமிழ் ஆண்டு மூவாயிரத்த தொன்னூறில், அதாவது இரண்டாயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மாமன்னன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை மிகவும் பலமாக உள்ளன. ஆனால், 7 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை மட்டும் எப்படி உடைந்தது. இதிலிருந்து எந்த தரத்தில் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. அணை உள்ளிட்ட நீராதாரங்களை பாதுகாப்பது அரசின் கடமை. பல இடங்களில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மதுரை தெப்பக்குளம், வண்டியூர் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆண்டு முழுவதும் தண்ணீரை தேக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை மாறும். எனவே, நீர் நிலைகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதையடுத்து, மனுவிற்கு பொதுப்பணித்துறை தரப்பில் விரிவான அறிக்கை பதிகை செய்ய அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,931.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.