அரசு தொடக்க நலங்கு நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், சிறுவனை வாயிலுக்கு வெளியே அதிக தூரத்தில் நிற்க வைத்து அறையின் உள்ளே அமர்ந்து மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்துள்ளார். 29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அரசு தொடக்க நலங்கு நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், சிறுவனை வாயிலுக்கு வெளியே அதிக தூரத்தில் நிற்க வைத்து அறையின் உள்ளே அமர்ந்து மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்துள்ளார்.இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நலங்குத்துறை அதிகாரி கவனஅறிக்கை அனுப்பியுள்ளார். விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் அரசு தொடக்க நலங்கு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். முந்;தாநாள் தொண்டை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக ஒரு சிறுவன், அந்த தொடக்க நலங்கு நிலையத்திற்கு சென்றான். அங்கு மருத்துவர் அறை உள்ள ஒரு கட்டிடத்திற்கு வெளியே, வாசலிலேயே அந்த சிறுவன் நிற்க வைக்கப்பட்டான். தொடர்ந்து அந்த கட்டிடத்தின் உள்ளே, அதாவது ஒரு மீட்டருக்கும் அதிக தூரத்தில் இருக்கையில் மருத்துவர் அமர்ந்திருந்தார். சிறுவனிடம், என்ன சிக்கலுக்காக சிகிச்சை பெற வந்துள்ளாய் என்று அங்கு பணியில் இருந்த மருத்துவரும், நலங்குப் பணியாளர் ஒருவரும் கேட்டனர். பின்னர் அந்தச் சிறுவனை அருகில் வர வைக்காமல் அதே தூரத்திலேயே நிற்க வைத்து அந்த மருததுவர், தான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தபடியே சிறுவனின் முகத்தில் கைவிளக்கு அடித்துப்பார்த்து, பின்னர் மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்துள்ளார். இது சம்பந்தமான காணொளி ஒன்று தற்போது புலனம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது. பிறரால் கொரோனா நோய் தொற்று தமக்கு வந்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருப்பது முதன்மையே. அதற்காக இவ்வளவு தூரம் சமூக இடைவெளியை பின்பற்றி சிறுவனுக்கு மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்துள்ள நிகழ்வு அப்பகுதி பொதுமக்களிடையேயும் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடுவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நலங்குப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, பணியில் இருந்த மருத்துவர் மற்றும் நலங்குப் பணியாளர் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்பியுள்ளோம். அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



