கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசியது தொடர்பாக, அருண் கிருஷ்ணன் என்ற மிகச்சிறு அகவையுள்ள இளைஞன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோவை மாநகரின் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட பழம்பெரும் சிலைகளில் ஒன்று இதுவாகும். பெரியார் இயக்கங்களின் போராட்டங்கள், சிந்தனை நிகழ்வுகள் போன்றவை இங்கு வைத்து நடைபெறுவது வழக்கம். இன்று காலை திடீரென பெரியார் சிலை மீது யாரோ சிலர் காவி சாயத்தைப் பூசி விட்டு சென்றுள்ளனர். இதை அறிந்ததும் பெரியார் அமைப்பினர் அங்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். காவி சாயம் பூசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, மதிமுகவின் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் இராமதாஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் முதன்மைத் தலைவர்கள் இந்த நாகரிகமாற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஈரோட்டில் இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுபற்றி கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கோவை, போத்தனூர், காவல் நிலையத்தில் அருண் கிருஷ்ணன் என்ற மிகச்சிறு அகவையுள்ள இளைஞன் இந்த நாகரிகமாற்ற செயலுக்கு பொறுப்பேற்று சரணடைந்துள்ளார். போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிலர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில், பாரத்சேனா என்ற ஒரு முகநூல் குழுவை உருவாக்கியிருப்பதாகத் தெரியவருகிறது. அந்தக் குழுவில் இவரும் ஒரு நபராகத் தெரியவருகிறது. கோவையில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி அவமதித்ததாக சரணடைந்த இந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் இது தொடர்பாக காவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், கருப்பர் கூட்டம் என்கிற காட்சிமடையின் மூலம் வலையொளியில், கந்தர் சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசியதாகவும் தெரிவித்துள்ளார். பெரியார் தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்து ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிவிக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் கடமையாகும். மிகச்சிறு அகவையுள்ள இந்த இளைஞனை மன்னிப்பதுதான் அந்தத் தம்பிக்கு வழங்கும் பெரிய தண்டனையாக இருக்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



