27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும், ‘ஏறு தழுவல்’ என்னும் சல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி மாட்டுப் பொங்கல் அன்று நடத்தப் பட்டு வருகிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 5000ஆண்டுகளுக்கு முன்னம் தமிழரே இந்தியா முழுவதும் பரவியிருந்தமையும், இந்தியா முழுவதும் பரவியிருந்த அனைத்து தமிழர்களாலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப் பட்டு வந்தமையும் புலனாகிறது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. பொன் மற்றும் வௌ;ளிக் காசுளை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். சல்லிக்கட்டு என்பது தமிழர் ஏறுதழுவுதல் விளையாட்டிற்கு மிக பிற்காலத்தில் வழக்கில் வந்த பெயராகும். காளையின் கொம்பில் கட்டப் படும் காசுகளின் முடிப்பை மட்டும் காரணமாக கொண்டு எழுந்த பெயராகும். அதுவே மணிப்பிரவாள நடை காலத்தில் ஜல்லிக்கட்டாக திரிந்தது. சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வோறு விதமாக திரிந்தது. வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள். சங்க இலக்கியமான கலித்தொகை கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள். அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரையில், ‘கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்’ என்று எழுதுகிறார். ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும். உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம். தமிழர் பழமையை, வீரம் மற்றும் இயற்கை சார்ந்த பண்பாட்டுப் பெருமையை பொறாமைக்கண் கண்டு நோக்குகிறவர்கள் ஏறுதழுவல் விளையாட்டில் பொய்யான குற்றங் குறைகளைச் சுட்டி அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய அறங்கூற்று மன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா, இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அன்னிய அமைப்புகளும் இதில் அடக்கம். கடந்த பத்துக்கு மேலான ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மக்கள், தமிழ் பண்பாட்டு எதிரிகளோடு தொடர்ந்து அறங்கூற்று மன்றங்களில் வழக்காட வேண்டியதாக இருந்தது. கடந்த ஆண்டு ஒட்டு மொத்த தமிழகமே திரண்டெழுந்து, வரலாறு காணாத அமைதிப் போரட்டத்தின் மூலம் தமிழர் வீர விளையாட்டான சல்லிக் கட்டு என்கிற ஏறுதழுவுதலை சட்டப் படி நிரந்தரமாக மீட்டெடுத்தது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,664
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



