10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக நாள், என்பது படித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் சித்திரை 10ம் நாளன்று (ஏப்ரல் 23) ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தமிழர்களாகிய நாம் நம்முடைய தொன்மங்கள் ஆன பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றை பார்த்தும், படித்தும், புதிய பதிப்புகளை பதிப்பித்தும் மகிழ்வோம். அருவருப்பு, மற்றும் ஆரிய கற்பனை, மாயஜால வித்தை மாயையில் நடை போட்டுக் கொண்டிருக்கும் போக்கை மாற்றி, உண்மை, எதார்த்தம் நிறைந்த அகநானூறு, புறநானூற்று பண்பாட்டில் சின்னத் திரை தொடர்களை உருவாக்குவோம். ஆரியர்கள் அவர்கள் தொன்மங்களான இராமயணம், மகாபாரதம் என்கிற இரண்டை மட்டும் வைத்துக் கொண்டே ஒட்டு மொத்த உலகத்தையும் தங்கள் அறிவுச் சொத்துக்கான வாடிக்கையாளர்களாக தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் திருக்குறளை மட்டுமே கொஞ்சம் கொஞ்சம் கொண்டாடி வருகிறோம். தமிழர்களாகிய நாம் இன்று, தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றின் புதிய பதிப்புகளை கடைகளில் சென்று தேடுவோம். வாங்கி நம் வீட்டு நூலகத்தின் புத்தக எண்ணிக்கையைக் கூட்டுவோம். நண்பர்களுக்கு பரிசளிப்போம். எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை. அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்ப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது: நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை இவற்றுள், அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல். புறப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும், அகப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும் அரிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றிலும் அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. கடைச்சங்கத் தொடக்கத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் இலங்கியுள்ளனர். அக்காலத்தே ஆண்ட சேர, சோழ, பாண்டியர், சிற்றரசர்கள் குறுநில மன்னர் ஆகியயோரைப் பற்றிய குறிப்புகள் புறநானூற்றில் மிகுதியாகவும் அகநூல்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன. பொதுவாக எட்டுத்தொகை நூல்களில் பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும், வரையாது வழங்கும் வள்ளன்மைப் பண்பையும், மறக்குடி மாண்பினையும், போர்த் தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின் இயல்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புகளையும் வானியல், மருத்துவக் கருத்துகளையும் அறியலாம். சங்க நூல்களை எட்டுத்தொகை என்றும், பத்துப்பாட்டு என்றும் பகுத்துக் காண்கின்றனர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளும் தனித்தனி முழுமையான பாட்டுகள். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு,பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. பத்துப்பாட்டுக்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கான செய்யுள்: முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. என்பதாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,766.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



