Show all

துப்பாக்கியுடன், வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, வடஇந்தியக் கொள்ளையன் பிடிக்கப் பட்டான்

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், துப்பாக்கியோடு நுழைந்த பீகாரைச் சேர்ந்த சுனிப் யாதவ் என்ற கொள்ளையன், காசாளரிடம் பணத்தைக் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான். அருகில் நின்ற வாடிக்கையாளருக்காக எண்ணப் பட்ட 6லட்சம் ரூபாயை காசாளர் கொடுத்துள்ளார். 

அதை சட்டைக்குள் நுழைத்த சுனிப் யாதவ், தன்னுடைய இரண்டு கைகளிலும் துப்பாக்கியைப் பிடித்தவாறு வாடிக்கையாளர்களையும் வங்கி ஊழியர்களையும் மிரட்டியபடி வெளியில் சென்றான்.

வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஏறினான். கொள்ளையனைப் பின்தொடர்ந்தவர்கள் அவனைப் பிடிக்க முயன்றனர். சுனிப் யாதவ், பைக்கை முடுக்கிய போது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கியிலிருந்த குண்டு தரையில் பாய்ந்தது. இதனால், அவனைப் பிடிக்கச் சென்றவர்கள் மீண்டும் வங்கிக்குள் ஓடினர். மேலும், அந்தப் பகுதியில் நின்றவர்கள் அலறியடித்து ஓடத்தொடங்கினர். அதன்பிறகு, மீண்டும் அவன் பைக்கை முடுக்க சுனிப் யாதவ் முயன்றபோது, திடீரென அவனை இரண்டு போக்குவரத்து காவலர் மறைந்திருந்து தாக்கினர். இதில் நிலைதடுமாறி அவன் கீழே விழுந்தான்.

அடுத்த நிமிடத்தில், காவலர்கள் துப்பாக்கிகளைப் பறித்தனர். இன்னொருவர், சுனிப் யாதவ்வின் கைகளை மடக்கிப்பிடித்தார். அதற்குள் பொதுமக்கள் அங்கு திரண்டு, கொள்ளையனை சரமாரியாகத் தாக்கினர். இதில், அவனது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. கொள்ளையனை மீட்டு, தானியில் அடையாறு காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து கூறுகையில், 'வங்கியில் கொள்ளையடித்த சுனிப் யாதவ், சென்னை கேளம்பாக்கத்தில் குடியிருந்துவருகிறான். இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டுவந்து, கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். அவன் மட்டும்தான் வந்தானா இல்லை அவனுடன் வேறு யாரும் வந்தார்களா என்று மேலும் விசாரித்துவருகிறோம். கேளம்பாக்கத்துக்கு காவல்படை சென்றுள்ளது. கொள்ளையன் வந்த சமயத்திலிருந்து அவன் புறப்பட்டுச்செல்லும் வரை நடந்த சம்பவங்களை கண்காணிப்பு படக்கருவி மூலம் ஆய்வு செய்துவருகிறோம்' என்றனர். 

கொள்ளையனைப் பிடித்த மூன்று போக்குவரத்து காவலர், இரண்டு பொதுமக்கள் ஆகியோரை சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சுதாகர், பாராட்டியதோடு வெகுமதியும் அளித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,766.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.