Show all

ஏன்? சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பதினோறாம் வகுப்புகளுக்கு சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவுகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பதினொன்றாம் வகுப்புகளுக்கான சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. பெற்றோருடன் செல்லும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடப்பாண்டும் அது தொடர்ந்து வருகிறது. 11 மற்றும் 12 வகுப்புகளை பொறுத்தவரை, கணிதம் மற்றும் கணினி அறிவியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவும், வணிகவியல், பொருளியல் அடங்கிய கலைப்பிரிவும் மட்டுமே பெரும்பாலான அரசு பள்ளிகளில் உள்ளன. இவற்றில் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், பொறியியல் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே, கலைப்பிரிவில் சேரவே மாணவர்கள் அதிக முதன்மைத்துவம் கொடுக்கின்றனர்.

எளிதாக தேர்ச்சி பெறலாம், அதிக மதிப்பெண் பெற முடியும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம், உயர்கல்வியில் பல பிரிவுகளில் சேரும் வாய்ப்பு போன்றவையே மாணவர்களில் பலர் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க காரணம். மேலும், 11ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், அறிவியல் பிரிவில் படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணுகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவில் உள்ள இடத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் வருவதால், அனைவருக்கும் சேர்க்கை வழங்க முடிவதில்லை. எனவே, மாணவர்கள் ஆர்வம் காட்டும் பள்ளிகளில் மட்டும் கூடுதல் வகுப்புகளை தொடங்கவும், ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாணவர்கள் அதிகம் கலைப் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதே அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேருவதற்கான காரணம். கலைப் பிரிவுகளைப் பொறுத்த வரை மதிப்பெண்களை விட விடமுயற்சி, மாணவர்களின் தனித்த ஆற்றல், தன்னம்பிக்கை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன், ஆகியவைகளே அவர்களின் தொடர் முன்னேற்றத்திற்கு களம் அமைத்துத் தருவனவாகும் இது தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளிலேயே சாத்தியம் என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் உணர்ந்து வருகிறார்கள். என்றும் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,802. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.