Show all

சுப்பரமணியசாமி பரபரப்புக்கு இரை குருமூர்த்தி! சோ குடும்பத்திடம் இருந்து துக்ளக்கை அபகரித்தது ஏன்?

சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை அபகரித்து ஏன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை அபகரித்து ஏன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு குருமூர்த்தி தனது கீச்சுப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். 

இந்த நிலையில் துக்ளக் யாருக்கு சொந்தமானது என்பதும் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக திமுகவினர் நிறைய புகார்களை அடுக்கி வருகிறார்கள். துக்ளக்கை நிறுவியது சோ. அவரின் மறைவிற்கு பின், சோ வாங்கிய கடனுக்காக குருமூர்த்தி துக்ளக்கை பறிமுதல் செய்து கொண்டார். சோ மனைவியை கட்டாயப்படுத்தி, இப்படி செய்துவிட்டார், என்று திமுகவினர் பலர் இணையத்தில் குற்றஞ்சாட்டி இருந்தனர். 

இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். அதன்படி சோ மனைவியிடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை மிரட்டி வாங்கி இருக்கிறார். இதற்கு பின் என்ன நடந்தது என்று குருமூர்த்தி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் ஏன் சோ மனைவியிடம் இருந்து துக்ளக்கை பறித்தார் என்பதை விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். 

பலர் கடந்த ஓர் ஆண்டாக வைக்கும் புகார் போல நான் துக்ளக்கை யாரிடம் இருந்தும் அபகரிக்கவில்லை. 32 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் குழுமத்திடம் இருந்து, ராம்நாத் கோயங்கா என்பவரின் கோரிக்கையின் பெயரில் துக்ளக்கை வாங்கினேன். ஆனால் அதில் எனக்கு பங்கு இல்லை. என் மனைவிக்கு மட்டுமே பங்கு இருந்தது. அதன்பின் சோதான் துக்ளக்கை நடத்தி வந்தார். என் மனைவி பணிகளை கவனித்தார். நான் நேரடியாக எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவேன். சோ உடன் இணைந்து நிறைய திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். முதன்மையான கட்டுரைகளை எழுதி இருக்கிறோம். 

13 ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக்கில் என்னை வாரிசாக வேண்டும் என்று சோ கோரிக்கை வைத்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். மேலும் துக்ளக் இதழின் 50விழுக்காட்டு பங்குகளை மீண்டும் அவரிடமே விற்றுவிட்டேன். எனக்கு துக்ளக் மீது விருப்பம் இல்லை என்பதை உணர்த்த இப்படி செய்தேன். ஆனால் சோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன்பின் சோவின் மறைவுக்கு பின் துக்ளக்கின் பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டும் என ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் என்னிடம் வலியுறுத்தினார்கள். சோ மறைந்த அடுத்த நாள் துக்ளக்கின் மொத்தக்குழுவும் தன்னை சந்தித்து பொறுப்பேற்க வலியுறுத்தியது . அப்போது தமிழகம் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கண்டு கொண்டிருந்தது. இதனால் துக்ளக்கின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன் ஆனால் இப்போது வரை துக்ளக்கில் கட்டுரை எழுத்துவதற்காக, அதில் பணி செய்வதற்காக நான் சம்பளம் வாங்கவில்லை. 50விழுக்காட்டு நேரத்தை நான் துக்ளக்கிற்காக செலவிடுகிறேன். ஆனால் நான் அதை அபகரிக்கவில்லை. அதை அபகரிக்கும் எண்ணம் எனக்கு இருந்திருந்தால், என் பங்குகளை சோவுக்கு மீண்டும் விற்று இருக்க மாட்டேன், என்று குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.