13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதாவின் பிறந்த நாளான நேற்று அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. சிலையைப் பார்த்த தொண்டர்களுக்கு சிலையின் தோற்றம் ஜெயலலிதா போன்று கம்பீரமாக இல்லாமல் யாரோ வயதான பெண்மணி போன்று உள்ளதே என்று அதிர்ச்சியடைந்தனர். தங்கள் கட்சித்தலைவர்கள் முன் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நல்லா இருக்கு தலைவரே என்று கூறி அமைச்சர்களை மகிழ்ச்சியைக் கெடுக்க மனமில்லாமல் விட்டு விட்டனர். ஆனால் எதிர்க்கட்சியினர், தினகரன் தரப்பினர் சிலை அமைப்பை பற்றி கிண்டலடிக்க தொடங்கினர். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர், வெற்றிவேல் செயலலிதா படத்தை திறக்கச்சொன்னால் வேறு யாருடைய சிலையையோ திறந்துள்ளார்களே என்று பேட்டி அளித்தார். வலைதளங்களில் அதிமுக அமைச்சர்கள் இதுவரை சந்தித்திராத அளவுக்கு சிலை விவகாரம் விமர்சிக்கப்பட்டது. சிலை செயலலிதா போன்று இல்லை என பலர் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து யார் போல் உள்ளது என்றும் தெரிவித்து கருத்துப்படம் போட்டனர். சிலை அமைப்பு பற்றி கேள்வி கேட்டபோது அமைச்சர் ஜெயக்குமார் கோபமடைந்து “மனசாட்சி இல்லாத மிருகங்களே சிலை நன்றாக இல்லை என்று பேசும், தெய்வத்தை நிந்தனை செய்பவர்களை தெய்வம் சும்மாவிடாது” என்று பேட்டி அளித்தார். சிலை வடித்த சிற்பிக்கு மோதிரம் போட்டதையும் விமர்சித்து இணைத்தில் பதிவிட்டு நையாண்டி செய்திருந்தனர். சிலை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று ஆந்திராவில் சமீபத்தில் செய்யப்பட்ட செயலலிதா சிலையையும் பதிவிட்டு கிண்டலடித்திருந்தனர். இந்நிலையில் சிலையின் அமைப்பு சரியில்லை என வலைதளங்களில் வரும் பதிவுகள் அமைச்சர்களை அசைத்துப்பார்த்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் சிலை விவகாரம், வலைதளங்களில் வரும் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டபோது தமிழக மக்களின் மனங்களில் வாழும் செயலலிதாவின் சிலையை நேற்று திறந்தோம், அவரது சிலைப்பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வந்துள்ளதை கருத்தில் கொண்டு, செயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதற்காக அந்தச் சிலையை செய்த சிற்பி மீண்டும் அழைக்கப்பட உள்ளார். என்று தெரிவித்தார். இதே கருத்தை அமைச்சர்கள் மாஃபா பாண்டிய ராஜன், கடம்பூர் ராஜுவும் தெரிவித்துள்ளனர். மாஃபா.பாண்டியராஜன் செயலலிதாவின் உருவச்சிலையில் உள்ள முகம் மறுசீரமைப்பு செய்யப்படும், ஜெயலலிதாவின் முழு சிலையும் நன்றாக இருந்தாலும், இன்னும் மெருகூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா சிலையில் குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,709
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



