Show all

வந்தியத்தேவன் எங்கே? சுந்தரபாண்டியன் எங்கே? விடிவுக்காய் தமிழ்மக்கள் விழிகள் தேடிக் கொண்டிருக்கின்றன

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  தமிழகத்தில் நிகழும் நடப்புகளைப் பார்த்தால், பொன்னியின் செல்வன், அகிலனின் கயல்விழி போன்ற வரலாற்றுப் புதினங்கள் படிப்பது போல ஒரே பரபரப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது.

யார் நல்லவர்? யார் கெட்டவர்? யார் தலைநிமிரச் செய்யப் போகிறார்கள்? யார் குப்பறத் தள்ளி குழி தோண்டப் போகிறார்கள்? ஒன்றுமே புரியாத நிலை! 

கமல், ரஜினி, தினகரன், விசால், விஜய், இப்படி பலர் நாங்கள் தான் தமிகத்தின் எதிர்காலம் என்கிறார்கள்.

நோட்டாவிற்கு இணையாகக் கூட தமிழர்கள் மதிக்கத் தயார் இல்லாத கட்சி தாமரை மலர்ந்தே தீரும் என்று முழக்கமிடுகிறது. 

மாசு விளைக்கும் ஆலையை மூடு என்று பேரணி நடத்தினால் துப்பாக்கியால் சூடுகிறார்கள். யார் சுட்டது? யார் அனுமதி கொடுத்தது என்ற விவாதம் நடந்து கொண்டேயிருக்கிறது.

இதழியல் பெண்களை இழிவாக எழுதிய எஸ்வி சேகர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. சோபியா, 'பாஜக பாசிச ஆட்சி ஒழிக' என்று முழக்கமிட்டால் கைது, பிணை விடுதலை, எல்லைக்கடவு முடக்க யோசனை, பின்னனி குறித்த விசாரணை அப்பப்பா என்ன பரபரப்பு.

தமிழ்மகள் ஆண்டாளை இழிவு படுத்தி வைத்திருந்த சமுதாயம், அவருக்காக கேள்வி எழுப்பிய வைரமுத்துவை தரக்குறைவாக சாடுகிறது.

தமிழ்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்காத ஹிந்துத்துவம்.

பசுமையை அழித்துப் போடப் படும் சாலைக்குப் பெயர் பசுமை வழிச்சாலை. மக்களின் அதிகாரமான பணத்தாள் மதிப்பிழப்பு. அடிமைத்தனமாக ஆதார் தனிமனிதன் அதிகாரம்.

தமிழகத்தில் தமிழர்கள் கட்டிய கல்லூரிகளில் தமிழர்கள் பயில நீட் என ஒரு தேர்வு. 

வந்தியத்;தேவன் எங்கே? சுந்தரபாண்டியன் எங்கே? தமிழ்மக்கள் விழிகள் தேடிக் கொண்டிருக்கின்றன. திரும்பி பக்கமெல்;லாம் எட்டப்பர்களே காட்சியளிக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.