27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 27 ஆண்டுகள் நாளை முடிவடையும் வேளையில் பேரறிவாளன் விடுதலை எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இராஜிவ்காந்தி கொலைவழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு நாளையுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன . கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனைக் காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 27 ஆண்டுகளுக்கு முன் இரவில் நடுவண் சிறப்பு புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை ஏற்று பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பி வைத்தனர். ஆனால், இராஜிவ் கொலை குறித்த சில விளக்கங்களை பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி கொலை வழக்கில் சேர்த்தனர். ஒளி மங்கிய வேளையில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பேரறிவாளனின் வாழ்க்கை அதன் பின்னர் இருள் சூழ்ந்ததாக மாறி விட்டது. இது நடந்து 27 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் பதின்வயதில் கைது செய்யப்பட்டு வாழ்நாளின் பாதியை இழந்து விட்ட பேரறிவாளனின் விடுதலைக்காக, தங்கள் உயிரில் பாதியை இழந்து விட்ட அவனது பெற்றோர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உணராத நடுவண், மாநில அரசுகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தை வைத்து அறங்கூற்றுமன்றங்களின் உதவியுடன் இரக்கம் இல்லாமல் அரசியல் விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கின்றன. பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து பதிவு செய்ததன் மூலம் அவருக்கு தூக்குத் தண்டனை கிடைக்க தாம் காரணமாகி விட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டதுடன், அதை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மனுவாகவே பதிகை செய்திருக்கிறார். அதன் அடிப்படையில் பேரறிவாளனை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்ய அனைத்து நியாயங்களும் உள்ளன என்பது ஒருபுறமிருக்க, அவரை குற்றவாளியாக அறிவித்து அறங்கூற்றுமன்றங்கள் விதித்த தண்டனையை விட கூடுதலாகவே தண்டனை அனுபவித்தும் அவர் இன்னும் விடுதலை செய்யப்படாதது ஏன்? என்பது தான் தமிழர்களின் வினாவாகும். இராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மூவரின் தூக்கு தண்டனையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த தனது கருத்தை நடுவண் அரசு 3 நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார். அடுத்த சில நாட்களில் 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து அப்போதைய நடுவண் அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அப்போது என்ன நிலைமை இருந்ததோ அதே நிலை தான் இப்போதும் நீடிக்கிறது. 7 தமிழர்கள் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. ஏழு தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவுக்கு நேரில் நன்றி தெரிவித்த பேரறிவாளனின் தாயாரிடம், உங்கள் மகனை விடுதலை செய்து உங்களிடம் ஒப்படைப்பேன். கலங்காதீர்கள் என்று ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை காப்பாற்ற வில்லை. அவருக்குப் பிறகு அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறிக்கொள்பவர்களும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நடுவண் அரசு சார்பில் கூறப்படும் எதோ ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுவதும், பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. அவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 27 ஆண்டுகளைக் கடந்தும் அப்பாவிகளின் சிறை வாசம் தொடர்கிறது. உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள்தண்டனை கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை. ஆனால், யாருக்கோ அஞ்சி அந்த வாய்ப்பைப் பயன்படுத்த பினாமி ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழர்களுக்கு நடுவண் அரசிடமிருந்து நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி 161ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி அவர்கள் விடுதலை ஆவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மருத்துவர் இராமதாசு அவர்களின் இந்த ஆதங்கத்திற்கு வலுவூட்டும் வகையாக வெளிவந்த, திருச்சி வேலுச்சாமி அவர்களின் 'ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்' என்ற நூல்ளூ அந்த நூலைப் பற்றிய சீமான் அவர்களின் அந்த நூலுக்கான முகவுரை நம்மையும் ஆதங்கப் படுத்தும். ராஜிவ் கொலை மர்மம் சீமானின் அதிரடி முகவுரை: எண்ணற்ற வினாக்களை எழுப்பும் மதிப்புமிக்க நூல்! முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழத்தின் நம் சொந்தங் கள் நடத்திய நியாயமான, தீரமிக்க விடுதலைப் போராட்டத்தையும் பெரிதும் பாதித்த ஒரு நிகழ்வாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இராஜீவ் காந்தியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி, அதை இந்திய மண்ணில் நிறைவேற்றியது என்று இராஜீவ் கொலையை புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுக் கழகம் கூறியது, அதனை நீதிமன்றங்கள் ஏற்று தீர்ப்பும் அளித்தன. அதன் விளைவே நமது தம்பிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி கடந்த 21 ஆண்டுகளாக சிறைக்கொட்டடிகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இராஜீவ் காந்தியை உண்மையில் சதித்திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார்? ஏன் கொன்றார்கள்? அதனால் அவர்கள் அடைந்த இலாபம் என்ன? என்கிற கோணத்தில் சிந்தித்தவர்களுக்கெல்லாம் எட்டாத பல உண்மைகளை தான் பெற்ற நேர்முகமான அனுபவங் களின் வாயிலாக, அன்றிருலிருந்து இன்று வரை தமி ழக மக்களிடம் துணிச்சலாக எடுத்துக் கூறி வருபவர் அண்ணன் திருச்சி வேலுசாமி அவர்கள். இராஜீவ் காந்தியின் கொலை பற்றியும், அதன் பின்னுள்ள அரசி யலைப் பற்றியும், சதியைப் பற்றியும் பேசுவதற்கே பலரும் அஞ்சிய காலகட்டத்தில், இராஜீவ் கொலையில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களின் முகங்களை தமிழ்நாட்டின் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டினார் வேலுசாமி அவர்கள். இராஜீவ் கொலையின் முக்கிய சூத்திரதாரிகளான சந்திராசாமி, அரசியல் தரகர் சுப்ரமணியம் சாமி ஆகியோரின் பங்கு பற்றி இந்தியாவின் பல நாளிதழ்களும் ஊடகங்களும் அவ்வப்போது எழுதினாலும் அண்ணன் வேலுசாமி மட்டுமே அதனை தொடர்ச்சியாக, உண்மையின் குரலாய் மக்களிடம் பேசிவந்தார். ஜனதா கட்சியின் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும், இந்திய அரசியலில் சக்திமிக்க அரசியல்வாதியாகவும் திகழ்ந்த சுப்ரமணியசாமியுடன் நெருங்கிப் பழகி, அவருடைய நம்பிக்கையை பெற்றவராக இருந்தும், இராஜீவ் கொலையில் சாமிக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் முளைவிட்ட நாள் முதல், அவருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அண்ணன் வேலுசாமி விலைபேசியிருப்பாரேயானால் இன்றைக்கு வியத்தகு நிலையில் மிகுந்த அதிகாரமிக்க மத்திய அமைச்சராகவே உலா வந்திருப்பார். ஆனால், தனது வாழ்விற்கே அச்சுறுத்தலாகும் அளவிற்கு ஆபத்து நிறைந்த அந்த கொலைச் சதியைப் பற்றி, தான் அறிந்த உண்மைகள் அனைத்தையும் மக்கள் மத்தியில் சொல்வது என்று முடிவெடுத்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரமாகச் சென்று விரிவாக பேசியது மட்டுமின்றி, ஜெயின் ஆணையத்தின் முன் வாக்குமூலம் தாக்கல் செய்து உண்மையை உலகிற்குப் பறைசாற்றினார். ஜெயின் ஆணையத்தில் வேலுசாமி அவர்களின் வாக்குமூலமும் சுப்ரமணிய சுவாமியை அவர் குறுக்கு விசாரணை செய்தததும் அவருடைய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாமல், வியர்வை மழையில் சுப்ரமணியசாமி நனைந்து நின்றதும், இராஜீவ் கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் யாரென்பதை உலகம் உணர உதவியது. சுப்ரமணிய சாமிக்காக பேரம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் இராஜீவை கொல்ல சதித்திட்டம் தீட்டியது ஜெயின் ஆணைய விசார ணையில் வெளிப்பட்ட பின்னரும் அவர்களை விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனின் உண்மை முகத்தை அன்றைக்கே கிழித்தெறிந்தவர் அண்ணன் வேலுசாமி அவர்கள். 'ராஜீவ் படுகொலை : தூக்குக் கயிற்றில் நிஜம்' என்ற இந்த புத்தகத்தை படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. இந்தியாவைப் போன்றதொரு ஜனநாயக நாட்டில், அதன் முன்னாள் பிரதமரை, இந்த நாட்டிற்குள் இருந்தே சதி செய்து கொன்றுவிட்டு, இன்று வரை இந்திய அரசியலில் கம்பீரமாக வலம் வர முடியும் என்றால், இந்த நாட்டின் அரசியலும் அதிகாரமும் யாரால் இயக்கப்படுகிறது? சுப்ரமணியசாமியை அண்ணன் வேலுசாமி குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் வியர்வை மழையில் நனைந்த காட்சியை நேரில் பார்த்த இராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி முகம் சிவந்தார் என்று எழுதியுள்ளார். ஆனால் பின்னாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சுப்ரமணியசாமி மீது ஏன் வழக்குத் தொடரப்படவில்லை, இராஜீவ் கொலையில் அந்நிய சதி குறித்து ஆராய அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை அமைப்பு ஏன் அவரை விசாரணைக்கு உட்படுத்தவில்லை? தமிழீழத்தின் மீது சிங்கள இனவெறியன் இராஜபக்ச தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு எல்லாவிதத்திலும் உதவி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமாகயிருந்த, இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைத் தனது காலடியில் வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது கணவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும்தான் என்று தெளிவாக தெரிந்த பின்னரும் அவர்களின் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. இப்படி எண்ணற்ற வினாக்களை எழுப்புகிறது அண்ணன் வேலுசாமி அவர்களின் இந்த மதிப்புமிக்க நூல். இப்படிப்பட்ட ஒரு நூலை வழங்கியதற்காக அண்ணன் வேலுசாமிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். எப்போதும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்தப்புத்தகத்தை தவறாது வாங்கிப்படிக்க வேண்டுகிறேன். செந்தமிழன் சீமான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,814.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



