Show all

எது சரி? குடும்ப அடையாளமா? தனிமனித அடையாளமா?

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'குடும்ப அடையாள அட்டை' சொல்லுவதற்கே ஓர் இனிமையான தலைப்பு! 

'இந்திய உணவுக் கழகம்' ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்ட இந்திய அரசு நிறுவனம்.

இதன் கடமைகள்:

உழவர்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு பயனுறு விலை ஆதரவை நல்குவது

பொது விநியோக முறைக்காக நாடு முழுமையும் உணவுத் தானியங்களை வழங்குதல்

தேசிய உணவு பாதுகாப்பிற்காக ஏற்றுக்கொள்ளத் தக்க செய்பணி மற்றும் இடைநிலை உணவுத்தானிய இருப்பை பராமரித்தல்

இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இந்திய உணவுக் கழகம் உள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் வழங்கல் சங்கிலி மேலாண்மை நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. ஐந்து மண்டல அலுவலகங்களுடனும் 26 வட்டார அலுவலகங்களுடனும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுக் கழகம் இந்திய கோதுமை உற்பத்தியில் 15-20 விழுக்காடும் அரிசி உற்பத்தியில் 12-15 விழுக்காடும் கொள்முதல் செய்கிறது. இவற்றை இந்திய அரசு நிர்ணயித்த விலையில் உழவர்களிடமிருந்து வாங்குகிறது. இந்த விலை குறைந்தபட்ச ஆதரவு விலை எனப்படுகிறது. தானியங்கள் சராசரி நியாய தர நிர்ணயத்தைக் கொண்டிருக்கும் வரை எந்த அளவிற்கும் கொள்முதல் செய்ய இக்கழகத்திற்குத் தடை இல்லை.

சேமிப்புக் கிடங்குகளிலிருந்து இந்தியா முழுமையும் எடுத்துச் சென்று மாநில அரசுகளுக்கு இந்திய அரசு விதித்துள்ள விலையில் வழங்குகிறது. இதனை மாநில அரசின் முகவர்கள் பொது வழங்கல் அமைப்பின் வழியாக குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு வழங்குகின்றனர். (இந்திய உணவுக் கழகம் நேரடியாக பொது வழங்கலில் பங்கேற்பதில்லை; தனது கிடங்குகளிலிருந்து தானியங்கள் வெளியேறிய உடனேயே அதன் பொறுப்பு தீர்கிறது). 

உணவுக் கழகம் உழவர்களுக்கு கொடுத்த விலைக்கும் மாநில அரசுகளுக்கு விற்ற விலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, அலுவலக செலவினங்கள் உட்பட, உணவு மானியமாக ஒன்றிய அரசு வழங்குகிறது. 

இந்திய உணவுக் கழகத்திற்கு அடிப்படை விலைகளை தீர்மானிக்கவோ, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யவோ முடிவெடிக்கும் அதிகாரம் இல்லை. ஒன்றிய அரசின் உணவு மற்றும் வேளாண் அமைச்சகங்களின் முடிவுகளை செயலாக்குவதே இதன் பணியாக உள்ளது.

இந்திய உணவுக் கழகம் நவீன சேமிப்பு வசதிகளை கட்டமைக்கவில்லை; இதன் கிடங்குகளில் பல தகுந்த கூரையின்றி இருப்பதால் இயற்கை சீரழிவுகளால் பெரும் தானியங்கள் வீணாகின்றன. மேலும் எலி போன்றவைகளால் உட்கொள்ளப்படுவதாலும் கையாடல்களாலும் கணக்கில் இல்லா இருப்புக் குறைவு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்படுவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரம் குறைந்த தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் டன் உணவுத் தானியங்கள் இவ்வாறு வீணானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய உணவுக் கழகம் என்கிற பொறுப்பில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒற்றைப் பொறுப்பை தட்டிக் கழிக்கும் முகமாக நடுவண் மோடி அரசு -

பொது விநியோக நியாய விலைக் கடைகளில் அரிசி வழங்குவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக நேரடி மானியம் செலுத்தும் யோசனை, வைத்து வருகிறது.

இந்திய உணவுக் கழகம் தானியங்கள் என்ற பெயரில் வழங்கும் குப்பையை பொது மக்களிடம் ஏச்சு பேச்சுகளை வாங்கிக் கட்டிக் கொண்டு விநியோகித்து, குடும்ப அடையாளம் என்கிற உன்னதமான மாண்பை போற்றி பாதுகாத்து வருகிறது மாநில அரசு.

நியாயவிலைக்கடை மூலம் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மானியத்தை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தும்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை நடுவண் மோடி அரசு நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது. பொதுவிநியோகத் திட்டத்தை சீரழிக்கும் நோக்கம் கொண்ட இந்த யோசனை கண்டிக்கத்தக்கதாகும்.

நடுவண் அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 

(பொது விநியோகத் திட்டத்தின்படி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு சாக்கை சொல்லி) 

அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக, அதற்கான மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நடுவண் அரசின் இந்த யோசனை செயல்படுத்தப்பட்டால் இந்தியாவில் பொது விநியோக முறை என்ற இந்திய மக்களை குடும்பமாக அங்கிகரிக்கும் உன்னதமானத் திட்டம் முற்றிலுமாக அழிந்து போய்விடும்.

உணவுப் பாதுகாப்பு சட்டம் என்கிற ஒரு தலைப்பில், பொது விநியோகத் திட்டத்தில் பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டை தாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடியை மிச்சப்படுத்தலாம் என கணக்கிட்டிருக்கிறது மோடி பாஜக அரசு. அதன்படியே அரிசி, சர்க்கரைக்கு பதிலாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மோடி அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமின்றி, நடுவண் அரசின் நேரடி மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பொது விநியோகத் திட்டம், நேரடிக் கொள்முதல் திட்டம் ஆகிய இரண்டுமே ஒழிக்கப்பட்டுவிடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளைபொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க நேரிடும் நிலையும் உருவாகும். அப்படி ஒரு நிலை உருவானால் ஏழைகளும், உழவர்களும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் தமிழகத்தில் தான் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது என்று உச்ச அறங்கூற்றுமன்றமே பாராட்டியிருக்கிறது. நேரடி மாநியத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் உன்னதமான பொதுவிநியோகத் திட்டம் சீரழிக்கப்பட்டுவிடும். ஏழை மக்களுக்கு இப்போதுள்ள உணவுப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

எனவே, அரிசி, சர்க்கரை ஆகியவற்றுக்கு பதிலாக நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மாநில அரசுகளை நடுவண் அரசு வலியுறுத்தக் கூடாது. நடுவண் அரசு வலியுறுத்தினாலும் அதை ஏற்காமல் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

குடும்ப அடையாள அட்டைக்காக 'இந்திய உணவுக் கழகம்' என்ற பெரிய நிறுவனத்தை நடுவண்அரசு செயல்படுத்தியாக வேண்டும். அதனால் குடும்ப அடையாள அட்டை தனிமனிதன் அதிகாரம் ஆகும். 

தனி மனிதன் அதிகாரம் என்று மோடி அரசு டுபாக்கூர் விடுகிற ஆதார் அடையாளம்: 'எங்கே நம்முடைய தரவுகள் களவு போய் விடுமோ' என்று பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய அடிமைத் தனமாகும். 

குடும்ப அடையாளமாக நாம் பெற்றிருக்கிற குடும்ப அடையாள அட்டை நாமக்கான அதிகாரம். நாம் கூட்டமாக கூடி நின்று நியாய விலையில் பொருள் வாங்கிக் கொண்டிருக்கிறோம். அங்கே நமக்கு கிடைப்பது அதிகாரம்.

மானியம் என்று ஏதோ ஒரு தொகையை அரசு அனுப்பி வைப்பதென்பது  ஆளுகிறவர்கள் நமக்கு தருகிற தற்காலிக உரிமை ; எப்போது வேண்டுமானலும் பறி போகலாம்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.