06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எண்வழிச் சாலைத் திட்டத்தால் கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதி மலை, வெடியப்பன்மலை , தீர்த்தமலை என மீள் உருவாக்கம் செய்ய முடியாத எட்டு மலைகள் பாதிக்கப்படுகின்றன. இத்திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல நீர்நிலைகள் அழிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. தற்போது உணவுப் பொருள்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைப் போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும். இந்தியாவில் வேளாண்மை அழிந்து வரும் நிலையில் இத்திட்டத்தால் நிறைய வேளாண் நிலங்கள் அழிக்கப்படும். வேளாண் தொழிலை நம்பி வாழக்கூடிய உழவர்கள், உழவுக் கூலிகள், உழவுத் தொழிலைச் சார்ந்து வாழக்கூடிய சார்பு நிலை தொழிலாளர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழிலை இழக்கக் கூட நேரிடலாம். இத்திட்டத்தால் அதிகளவு விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் விளைபொருளின் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி அதிகரிக்கும். உணவுப் பஞ்சம் ஏற்படக் கூடும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத மாநிலமாக தமிழகம் மாறும். கனிம வளங்கள் இல்லாத நிலம் பாலைவனம் என்பதைப் போல கஞ்சமலை, கவுதிமலை, வெடியப்பன் மலையில் உள்ள இரும்புத் தாதுகளும், தருமபுரியில் மாவட்டத்தில் பிளாட்டின பாறைகளும், கல்வராயன் மலை, ஜருகு மலையில் உள்ள கருங்கற்களும் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடியில் உள்ள கனிமங்களும் பாதிக்கும். சாலையின் இரு புறமும் சுற்றுச்சுவர் கட்டுவதால் ஒட்டி இருந்த கிராமங்கள் தொடர்புகளே இல்லாமல் பிரிக்கப்படும். இச்சாலையில் தொடக்கமே 120 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டியிருப்பதால் சாதாரண வாகனங்கள் செல்ல முடியாது. இச்சாலை 10 ஆயிரம் கோடியில் உருவாக்குவதால் சுங்கச்சாவடி கட்டணம் குறைந்தது கி.மீட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் இருக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் இச்சாலையில் பயணிக்க முடியாது. ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, அரூர் போன்ற பகுதிகளில் 23 கி.மீட்டர் வனப்பகுதியில் செல்லுவதால் வன உயிரினங்களின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதோடு அவற்றின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். இயற்கையைக் காக்க உலக நாடுகள் முன் வரும் நிலையில் இத்திட்டத்தால் பழைமை வாய்ந்த 2,00,000க்கும் மேற்பட்ட அடர்த்தியான மரங்கள் வெட்டப்படுகின்றன. அதற்குப் பதிலாக 4 மடங்கு மரங்கள் நட்டாலும், அவைகள் சாலையோரங்களில் ஒத்தை யொத்தையாக நடப்படுவதால் மழை ஈர்ப்பு வேலைகளுக்கு பயன் படாது. மாறாக வர்தா புயலில் செங்கல்பட்டிலிருந்து சென்னை வரை வழிநெடுக இருந்த மரங்கள் அனைத்தும், சாலையின் குறுக்கேயும், மின்கம்பங்கள் மீதும், மனிதர்கள் மீதும், வாகனங்கள் மீதும் விழுந்து பெரும் சேதத்ததை உருவாக்கிய வேலைகளுக்குதாம் பயன் தரும். மரங்கள் அழிக்கப்பட்டால் கரிஅமிலக் காற்று அதிகரிக்கும், உயிர்வளி குறையும். கரிஅமிலக் காற்று அதிகரித்தால் உலக வெப்ப மயமாதல் அதிகரிக்கும். இதற்கு பசுமைவழிச் சாலை என்று பெயரிட்டிருக்கிறார்கள். (வனஅழிப்பு) கொலைக் கூடத்திற்கு அன்பு இல்லம் என்கிற பெயரா? உச்சரிக்க அருவருப்பாய் இருக்கிறது. இந்திய அமைதிப்படை என்று பெயர் வைத்து, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி, ஒரேயொரு இலங்கை சிப்பயைக் கூட, கைது கூட செய்யாமல், பல ஆயிரம் தமிழ் இளைஞர்களை, இளைஞிகளைக் கொன்று குவித்ததோடு, அப்பாவித் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்திய கொடூரமே விளைந்தது. பசுமைச் சாலை என்கிற பெயரும் அவ்வாறனதுதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



