Show all

விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் திமுக தொண்டர்கள் தயாராகுங்கள்: ஸ்டாலின்

தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் நிலையற்ற தன்மையை அடுத்து விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

     உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சட்டமன்றத் தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

     பன்னீர்செல்வம் காபந்து முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி அமைக்கக் கோரியும் ஆளுநர் அவர்களை அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

     இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசியல் சூழல் இன்னும் சிக்கலாகியுள்ளது.

     கோவை மாவட்டம் சூலூரில் திமுகவின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது.

     அதிமுகவினருக்கு மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ சிந்தனை இல்லை. ஆட்சி அமைத்தாலும் அது அற்ப ஆயுள் கொண்ட அரசாகவே இருக்கும்.

     திமுகவில் 89 சட்;டமன்றஉறுப்பினர்கள் தற்போது உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றோம். அதனால் நம்மால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது.

 

     உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபை தேர்தலே நடக்க வாய்ப்பு உள்ளது. கடுமையாக உழைத்தால் நமக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது.

     நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனால் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இளைஞரணியில் உள்ள அனைவரும் புலனம், முகநூல், சுட்டகம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிர கருத்துப் பரப்புதல் மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.