Show all

கருப்பர் கூட்டத்தின் பதிவு குறித்து கொளத்தூர் மணி காணொளி! நியாயத் தீர்ப்புக்கு இது நன்றாகவே பயன்படும்

கொளத்தூர் மணி அவர்களின் இந்தக் காணொளியை வெளியிட்டு, கொளத்தூர் மணியும் கந்தர்சஷ்டி கவசத்தைப்பற்றி  இழிவாக பதிவு செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து விட்டார் என்று மலிவான கருத்துப் பரப்பதலை முன்னெடுத்து வருகின்றனர், கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிடுகிற, ஹிந்துத்துவா என்ற பெயரில் இதைக் கிளப்பிவிடுகிற அரசியல் சக்திகள் 

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: “கருப்பர் கூட்டம் என்றவொரு வலையொளி காட்சிமடையில், கந்தர்சஷ்டி கவசத்தைப்பற்றி மிகவும் இழிவாக பதிவு ஒன்று வெளியாகி இருப்பது குறித்து இப்போது பலதரப்புகளில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்து வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள். 

நான் அதைப் பார்க்கவில்லை என்றாலும்கூட எந்த ஒரு கருத்தையும் இழிவான சொற்களால் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைச் சொல்லிக் கொள்கிற அதே வேளையில், அப்படிப்பட்ட கருத்துக்கள் அந்த கந்தர் சஷ்டி கவசத்தில், அல்லது கந்தன் தொல்கதையில், இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி பெரும்பான்மை மக்கள் சிந்திப்பதில்லையே என்ற வருத்தம் என்மனதில் இருக்கிறது.

அது எந்த தொல்கதையாக இருந்தாலும் சரியே, ஐயப்பன் பிறப்;பைப் பற்றி தொல்கதையில் உள்ளதை அப்படியே வெளியே சொல்வதற்கு கூச்சமாகத்தான் இருக்கிறது. அது லிங்க தொல்கதை பற்றியதாக இருக்கலாம், இராமன் பிறப்பைப்பற்றிக் கூட இருக்கலாம், இராமன் பிறப்பைப்பற்றி வால்மீகி இராமயணம் என்ன சொல்கிறது என்பதை பொதுவெளியில் பேசமுடியாது. 

நான் வைக்கிற கோரிக்கையெல்லாம் இதுதான்: கருப்பர் கூட்டப்பதிவுக்காக கோபப்படுகிற ஹிந்துக்களே! ஹிந்துத்துவா என்ற பெயரில் இதைக் கிளப்பிவிடுகிற அரசியல் சக்திகளே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 

ஆபாசமானவை பேசப்படுகிறது என்றால், ஆபாசமான செய்தியுள்ள அந்தப் தொல்கதைகளை என்ன செய்யப் போகின்றீர்கள்? அது மனிதர்களிடம்  நாகரிகம் வளராத காலத்தில் எழுதப்பட்டு விட்டது இப்போது அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவிக்கப் போகின்றீர்களா? அல்லது எங்கள்  தொல்கதையில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்; நீங்கள் பேசக்கூடாது என்று சொல்லப் போகின்றீர்களா? என்பதுதான் நான் வைக்கிற கேள்வியாக இருக்கிறது.

எனவே ஆபாச தொல்கதைகளை நீங்கள் வைத்துக் கொண்டிருக்கலாம், அது குறித்து யாரும் பேசக்கூடாது என்று சொல்லுவது எந்த விதத்திலும் சரிஅல்ல. பேசியவர் உங்கள் கணக்கில் ஹிந்துதான் பேசியிருக்கிறார். 

எந்த ஹிந்துக்களில் பிற்படுத்தபட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் உரிமைப் பறிப்பை தடையில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றீர்களோ, கல்வியில் வேலைவாய்ப்பில் உள்நுழைவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றீர்களோ, தான் ஏற்றுக் கொண்ட மதத்தின் தெய்வத்தின் கோயிலுக்குள் அந்தத் தெய்வத்திற்கு உரிய வேதங்களைப் படித்திருந்தாலும், உரிய மந்திரங்களை அறிந்திருந்தாலும், வழிபாட்டு முறையில் பயிற்சிகளைப் பெற்று அதில் தேர்ச்சி அடைந்திருந்தாலும் அதில் போய் அவர் பூசை செய்யக்கூடாது அவர் இழிவான சாதியைச் சார்ந்தவர் என்று இழிவு படுத்துகின்றீர்களே, இந்த இழிவு படுத்துதலில் நியாயம் இருக்கிறதா என்பதையும் இந்த வேளையில் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.” கொளத்தூர் மணி அவர்களின் காணொளிச் செய்தி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.