Show all

துணை முதல்வர் டில்லி பயணம் யாருக்கு எந்த வகையில் பயனளிக்கப் போகிறது! பரபரப்பில் தமிழக அரசியல் வட்டாரம்

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையே, பிணக்கு குறையவில்லை. அணிகள் இணைந்ததும், எடப்பாடி அணியினருக்கு இருக்கின்ற வாய்ப்புகள் பன்னீர் அணியினருக்கு ஏதும் கிடைக்க வில்லை. 

வருமான வரிச்சோதனைகளுக்குப் பின்னரும் எடப்பாடி அணியினர் பாதுகாக்கப் பட்டிருப்பது பன்னீர் அணியினருக்கு நெருடலாக இருக்கும் போல. தங்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றிருந்தால் நிறைய சொத்து பத்துக்களோடு பாதுகாக்கத்தானே பட்டிருப்போம் என்பதான மனவருத்தம் எற்பட்டிருக்கும் போல.

வழிகாட்டி குழு அமைக்க, அணிகள் இணைந்தபோது முடிவு செய்யப்பட்டது; அதுவும் அமைக்கப்படவில்லை.மேலும்,பழனிசாமி அணியில் இருந்தோர், தொடர்ந்து பன்னீர் அணியை புறக்கணித்து வருகின்றனர். இது, கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று, சென்னை, தலைமை செயலகத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மாலை, 5:30 மணிக்கு, பன்னீர்செல்வம், திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். 

அவரது ஆதரவாளர்களான, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர். பன்னீரின் பயணம், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி சென்றுள்ள பன்னீர்செல்வம், இன்று நடுவண் அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. உட்கட்சி விவகாரம் தொடர்பாகவே, அவர் டில்லி சென்றுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இது, அ.தி.மு.க., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் பாஜகவினரின் மனநிலை எடப்பாடி- பன்னீர் அதிமுக மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் கணிக்கும் நிலையில், இந்த சந்திப்பு முயற்சி எந்த வகையில் யாருக்கு பயனுடையதாக அமையும் என்றே சொல்ல முடியாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,858. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.