Show all

நாளை முழுஅடைப்பு! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்து

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம், சாலை, தொடர்வண்டி மறியல், நடுவண் அரசு அலுவலகங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், நாளை தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன.

முழு அடைப்புப் போராட்டத்தை பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இக்கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், நாளை நடக்கவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாமக, தமாகா, கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கங்கள், உழவர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாளை தமிழகத்தில் பேருந்துகள் ஓடா என தொமுச தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு குறுந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,747.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.