சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவியும், தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளருமான வளர்மதி, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாகக் கூறி சூலை 13அன்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், வளர்மதி சூலை 17அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சட்டம் - ஒழுங்குப் பிரச்னை இல்லாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசியல் சாசனம் அனுமதி வழங்கியிருப்பதாகவும், அதன்படி போராடிய தனது மகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்றும் கூறி உயர் அறங்கூற்றுமன்றத்தில் அவரது தந்தை மாதையன் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் செப்டம்பர் 5அன்;று உத்தரவிட்டனர். கோவை நடுவண்; சிறையில் இருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட வளர்மதியை, சிறை வாசலில் திரண்டிருந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மேளதாளம் முழங்க வரவேற்றனர். என் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்வதாலோ, சிறையில் அடைப்பதாலோ சமூக அநீதிகளைக் கண்டிக்கும் என்னைப் போன்றவர்களை முடக்கிவிட முடியாது. அடக்குமுறை, போராளிகளை மழுங்கடிக்காது. அது அவர்களை மேலும் வலிமையானவர்களாகவே மாற்றும். சிறையில் அடைத்த பிறகும் என் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கையாண்டனர். சந்தித்து ஆறுதல் சொல்ல வந்தவர்களை உளவுப் பிரிவு காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். மேலும், அனைவர் மீதும் தீவிரவாத முத்திரை குத்தப் பார்க்கின்றனர். மாணவி அனிதாவின் துயர முடிவு, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் ஆகியவை மீண்டும் போராட்டத்துக்குத் தூண்டுகோலாகிவிட்டன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும், நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன். அதேநேரம், பெரியார் பல்கலைக்கழகத்தில் எனது படிப்பைத் தொடருவேன் என்றார் வளர்மதி. சிறையில் இருந்து விடுதலையானதும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் பகுதிக்குச் சென்ற வளர்மதி, அங்கு கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு தொடர்வண்டி இயக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



