Show all

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நாகரிகம்! பறை சாற்றும் சிவகளை அகழாய்வு

ஆதிச்சநல்லூர், கீழடி, தற்போது சிவகளை என்று தமிழ்நாட்டில் எங்கு தோண்டினாலும் தமிழர் அதிகாரத்தோடு வாழந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி வரலாற்றில் இணைத்து உலகம் பேசும் வகைக்கு செய்ய ஒரு வேரும் காணோம். தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் எண்பது விழுக்காடு படிக்கப்படாமல் கிடப்பில் இருப்பது போல இவைகளும் கிடப்பிற்கு போகாமல் இருந்தால் சரிதான். 

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நாளது 14,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122 அன்று (26.02.2021) தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் ஏரல் அருகே உள்ள கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகளையில் 15-க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகளையில் இதுவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழிகள், சுண்ணாம்பிலான முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் குறித்து சிவகளை தொல்லியல் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன், இந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் மற்றும் மக்கள் வாழ்விட பகுதி என பிரித்து இரண்டு பகுதிகளில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

முதுமக்கள் தாழிகள் நிறைந்த பகுதிகளான பரம்பு, பேட்மாநகரம், திருமூலக்கரை போன்ற இடங்களில் 18 குழிகள் அமைத்து 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் நல்ல நிலையிலும் மற்றவை உடைந்து சேதமடைந்த நிலையிலும் உள்ளன. இந்த முதுமக்கள் தாழிகள் வரும் கிழமைகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் குழுவால் ஆய்வு செய்யப்பட உள்ளன.

அதேபோல் வாழ்விட பகுதியாக கருதப்படும் பராக்கிரம பாண்டியன் திரடு, வேலூர் திரடு, ஆவாரங்காடு திரடு, செக்கடி திரடு போன்ற இடங்களில் முதல் கட்டமாக 3 இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதுமக்கள் தாழிகளில் இருந்து எலும்புக்கூடுகள், பற்கள், மக்கள் பயன்படுத்திய பானைகள், இரும்பு பொருட்கள் ஆகியவை அதிகமாக கிடைக்கின்றன. அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்படும் எலும்புகள், மனித எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் உள்ளிட்டவைகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டும், என்றார் பிரபாகரன்.

தொடர்ந்து பேசிய பிரபாகரன், மக்கள் வாழ்விடங்களில் இருந்து இதுவரை நடத்திய அகழ்வாய்வில் மண்ணாளான புகைப்பான், தக்களிகள் (நூல் நூற்க கூடியது) மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இருந்து இரும்பு கருவிகள் அதிகளவு கிடைத்தன.

குறிப்பாக வாள்கள், கூர்முனை கருவிகள்,கத்திகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இரும்பாலான ஆயுதங்கள் கிடைத்தன. 400க்கும் மேற்பட்ட பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், வெள்ளை புள்ளிகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்தன.

சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் இந்த ஆண்டு அதிக அளவு மக்கள் வாழ்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதால் இங்கு கிடைத்த பொருட்களின் அடிப்படையில் தமிழக தொல்லியல் துறை வரும் ஆண்டுகளிலும் இந்த அகழாய்வை நீட்டிக்கும் என்கிறார் சிவகளை தொல்லியல் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன்.

வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், ‘இந்த அகழ்வாய்வில் தமிழகத்தில் எங்கும் கிடைக்காத சில முதன்மைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் தொல்பொருட்கள் கிடைக்கின்றன. சிவகளை கொற்கைக்கும் ஆதிச்சநல்லூருக்கும் இடையில் இருப்பதால் அகழாய்வில் முதன்மைப் பங்கு வகிக்கிறது’ என்றார்.

தாமிரபரணி ஆற்றங்கரை ஓரமாக இதுவரை நடந்த அகழாய்வுகளில் இறந்தவர்களைப் புதைத்த இடுகாட்டு மேடு பகுதிகளில் மட்டுமே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக சிவகளையில் மட்டுமே தாமிரபரணி ஆற்றங்கரை ஓரங்களில் மக்கள் வாழ்விட பகுதிகளான ஏழு இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

சிவகளை சுற்றி மக்கள் வாழ்விடங்களில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து தமிழர்களுடைய பாரம்பரியமான நாகரிகம் வெளிவரும் அதுமட்டுமில்லாமல் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் எப்படியான நாகரிகம் இருந்தது, மக்கள் எவ்வாறான பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ்ந்தனர் என்பனவும் வெளியே வரும் என்றார்.

இரும்பு காலகட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக செம்பு உலோகங்களால் ஆன மனித உருவ சிலைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் அகழாய்வு நடைபெற்ற இடங்களில் கிடைக்காத வண்ணம் சிவகளை பகுதியில் அதிகமான வழிபாட்டுப் பொருட்கள், இறந்தவர்களுக்கு படையல் இட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழியை சுற்றியும் அடுக்குகள் (பானை வைப்பதற்கான வளையம்) சின்ன சின்ன மண்பானைகள் (கலையங்கள்) கிடைத்துள்ளன, என்றார் சிவானந்தம்.

தொடர்ந்து பேசிய சிவானந்தம் தாமிரபரணி என்றால் தாமிரம் அல்லது செம்பு உலோகம் என்று பொருள். எனவே செம்பு தாதுகள் அதிகம் நிறைந்த இடமாக இருந்திருக்கும். இந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து பார்க்கும் போது இரும்பு காலத்திற்கு முன் செம்பு உலோக பயன்பாட்டில் இருந்த காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் அதிகமாக உள்ளது.

சிவகளை அருகே உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் அதிகளவு கனிமங்கள் உள்ளதாக தெரிகிறது. இந்த கனிமங்கள் அனைத்தும் உறுதியா தாமிரபரணி ஆற்றுப் படுகையில் இருந்து கடலில் கலக்கும் நீரால் கடல் கனிம வளம் மிக்க கடலாக மாறி இருக்கலாம்.

தற்போது கிடைத்த பொருட்களின் அடிப்படையில் சிவகளை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது என்கிறார் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.