தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் யோகா வகுப்பு கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் யோகா வகுப்பு கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதை ஏற்க முடியாது. உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலவும் எச்சரித்திருக்கின்றன, தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இது, ‘பிஞ்சு நெஞ்சில் நஞ்சினைப் பாய்ச்சுவதாகும்’ என்பதோடு, இந்த உத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. ஓடி, ஆடி விளையாடுவதில் தான் பள்ளிச் சிறாரின் உள்ளமும், உடலும் உரம் பெறும். சுயமாகச் சிந்தித்து செயல்படும். யோகா மூலம் அவர்களை ஓரிடத்தில் வைத்து ஒடுக்குதல் செய்தால் அது பிஞ்சு நெஞ்சில் நஞ்சினையே பாய்ச்சுவதாகும். கொஞ்சமும் யோசிக்காமலா இப்படி யோகா வகுப்பினை பள்ளிகளில் நடத்த உத்தரவிட்டார் முதல்அமைச்சர் பழனிசாமி. தேவையற்ற இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழரின் ஓகக் கலைதான் யோகா என்று பெயர் மாற்றத்தோடு ஆரியருக்கு உரிய கலை போல, பாஜகவால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. யோகா திணிப்பு, எதிர்காலத் தலைமுறையாகிய மாணவா; தலைமுறையிடம் யோகாவைத் திணிப்பது ஹிந்துத்வா திணிப்பு என்றே தமிழ் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



