28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, இரு அணிகளாக மொத்தம் 39 பேர் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இரண்டு பிரிவுகளாகச் சென்ற அவர்களில் சென்னையிலிருந்து 27 பேரும், ஈரோட்டிலிருந்து 12 பேரும், சென்றுள்ளனர். தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேசுகையில் ‘குரங்கணி காட்டுத்தீயிலிருந்து இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் இல்லை. 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டும் 9 பேரை காப்பாற்ற முடியவில்லை. தீ விபத்தை பார்த்து பதற்றப்பட்டு ஓடியதால், 9 பேர் பள்ளத்தில் விழுந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் உலங்கு வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’ என்றார். ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த விபின் என்பவரின் உடல் மலைப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை உலங்கு வானூர்தி மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் வழங்கும் போது எதிர்காலத்தில், இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு அரசு இதையொரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,724.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



