தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக கமல்ஹாசன் நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதாகவும், எனவே தனிக்கட்சி தொடங்குவது குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்போடு பேசப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியைத் தொடங்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். விஜயதசமி நாளில் அதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. தனது முடிவு குறித்து இன்னும் நற்பணி மன்ற நிர்வாக தலைவர்களுக்கு கமல் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை முழுமையாக பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்று கமலுக்கு நெருக்கமான சிலர் தகவல்களை கசிய விட்டுக் கொண்டிருக்கின்றனர். திமுகவோ ஆளும் கட்சியோ பெரிய கூட்டணியை அமைக்கும் முன்பாக அரசியல் கட்சியை தொடங்குவது எதிர்காலத்திற்கு நல்லது என்று கமல் நினைக்கிறார் தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் இருப்பதாக கமல் கருதுகிறார். கமல் கூறும் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ந்துள்ளார். நற்பணி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்திக்கொண்டுள்ளார். தான் மதிக்கும் அரசியல் தலைவர்கள், முதன்மையானவர்களிடம் அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை தெரிவித்து ஆலோசனைகளை பெற்று வருகிறார். நவம்பரில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடுவதற்கு ஏற்ப, இம்மாத இறுதிக்குள் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை கமல் வெளியிடக் கூடும் என்கிறார்கள். சுமார் 4000 வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் உள்ளாட்சி தேர்தலின் மூலம், அடிமட்ட அளவுக்கு கட்சியை கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பது கமல் கணக்கு. நற்பணி மன்றத்தில் கட்டுக்கோப்பான நிர்வாகிகள் உள்ளனர். எனவே உள்ளாட்சி தேர்தலில் இவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கமல் நம்புகிறாராம். செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கிறார். மறுநாள் கோழிக்கோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செமினாரில் பங்கேற்கிறார். அதன்பிறகு அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



