Show all

2. கட்சத் தீவு மீட்பு மட்டுமே தமிழக மீனவர் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வாக முடியும்

நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார், ஏன் எனில் அப்பொழுது மற்ற கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள், மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி, நடுவண் அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம், எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

     அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினைச் சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர் நினைத்தால் மீட்க முடியும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

     இப்படி லட்டு மாதிரி நல்ல முன்னுதாரண சம்பவம் இருந்தும் 1974 இல் கட்சத்தீவை விட்டுக்கொடுத்த போது தமிழகத்தினை ஆண்ட தி.முக அரசு என்ன செய்தது,

     அண்ணா அவர்கள் தலைமையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை முன் வைத்தே அரசியல் செய்து வந்தது, தமிழைக் காக்க, தமிழர் உரிமையை நிலைநாட்ட காங்கிரசை விரட்ட வேண்டும் என்று சொல்லி தான் அரசியல் செய்து வந்தார்.

     1967 இல் நடந்த பொது தேர்தலிலும் இதுவே கொள்கையாக இருந்தது, காங்கிரசை கடுமையாக எதிர்த்தார்கள், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் என அண்ணாவுக்கே நம்பிக்கை இல்லை போலும் சட்டமன்றத்திற்கு போட்டியிடாமல், நாடாளுமன்றத்துக்கு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

     இந்தி எதிர்ப்பு, மாணவர் போராட்டம் ஆகியவற்றோடு, அக்காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதா, எம்ஜிஆரை சுட்ட சம்பவமும் சேர்ந்துக்கொள்ள, கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் சுவரெட்டியை ஒட்டி அனுதாப அலையை வீச செய்தார்கள், எல்லாம் சேர்ந்து காங்கிரசை வீழ்த்த உதவியது.

     மாநில சட்டமன்றத்திற்கும்;, நாடாளுமன்றத்திற்கும் நடைப்பெற்ற தேர்தலில் தி.முக அமோக வெற்றி,

     இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், இந்தியா முழுக்க வெறும் 283 இடங்களே வென்றது, ஆட்சி அமைக்க 273 இடங்கள் போதும் என்றாலும், 283 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்ற முடியாது, கிட்டத்தட்ட ‘சிறுபான்மை அரசு’ நிலை தான்.

     இந்நிலையில் தி.மு.க என்ன செய்தது என்றால், யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களுடனே தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள், காங்கிரசுக்கு தனது 25 பாராளுமன்ற உறுப்பினர்களும்  நிபந்தனை அற்ற ஆதரவு வெளியில் இருந்தே அளிப்பதாக அண்ணா அறிவித்து கூட்டணி ஒன்றை உருவாக்கிவிட்டார்.

பின்னர் 1969 இல் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வரான கலைஞரும் கூட்டணி உறவை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

     இப்படிப்பட்ட அரசியல் கொள்கையாளர்களுக்காக எளிமையும், நேர்மையின் வடிவமான  தமிழக காங்கிரஸ் தலைவரான காமராஜரையே தமிழக மக்கள் தோற்கடித்தார்கள் என்றால் அக்காலத்தில்  காங்கிரஸ் மீது எத்தகைய  வெறுப்புணர்வு திமுகவால் தூண்டி வளர்க்கப்பட்டு வந்தது என உணரலாம். அதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் ஆட்சிக்கு வந்ததும்; நட்புறவு.

     அதன் பின்னர் 1971 இல் மீண்டும் பொது தேர்தல் வந்த போது, கலைஞர் தலைமையிலான திமுகவும், இந்திரகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தன. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டாக உடைந்து ,காங்கிரஸ்-ஓ, காங்கிரஸ் ஐ என பிரிந்த கதை எல்லாம் நடந்துவிட்டது. எனவே இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வலிமையிழந்தே இருந்தது ஆனாலும் தி.மு.க விசுவாசமாக முட்டுக்கொடுத்து வந்தது.

     1971 பொதுத்தேர்தலிலும் இந்திரா காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.முக ஆட்சி, தி.முகவுக்கு 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு கிடைத்திருந்தார்கள், அமோக செல்வாக்குடன் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக கலைஞர் வந்தார். வழக்கம் போல மத்தியில் இந்திராவுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் கொடுத்திருந்தார்.

     இப்படியான அதி அற்புத கூட்டணி உறவு இருக்கும் சூழலில் தான் 1974 இல் தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை முன்னரே பார்த்த அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்தார், கூட்டணியில் பசைப்போட்டு ஒட்டியிருந்த கலைஞர் என்ன செய்திருக்கணும்?

     சும்மா பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் நாஞ்சில்.மனோகரனை விட்டு கண்டனம் தெரிவித்தார்,  அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக உறுப்பினரான  ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதாக்கட்சியின் அடல்பிகாரி வாஜ்பாயி எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

     அடுத்த நாளே, இந்திராகாந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் ஆலோசித்து, வெளியுறவு செயலாளர் கேவல் சிங்க் என்பவரை  தமிழகத்துக்கு அனுப்பினார், அவர் என்ன பேசினாரோ கலைஞரின் சுருதி அமுங்கிப்போச்சு.

     காரணமில்லாமல் ஒன்றும் கலைஞர் அடக்கி வாசிக்கவில்லை, எப்பொழுதுமே ஒரு கொண்டான் கொடுத்தான் கொள்கையை வைத்திருப்பார் ஒன்றை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஒன்றை பெற்று விடுவார்.

     அப்பொழுது கலைஞரின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, முக்கியமானது வீராணம் திட்ட ஊழல் ஆகும், வீராணம் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்த சத்தியநாராயண ரெட்டி என்பவர் மர்மமான முறையில் தற்கொலை எல்லாம் செய்துக்கொண்டிருந்தார், எனவே இது  பெரிய அளவில் பிரச்சினைகளை கழகத்திற்கு உருவாக்கியிருந்தது. வீராணம் திட்டம் குறித்து விசாரனைக்கமிஷன் அமைக்க வேண்டும் என தி.முக.வை விட்டுப்பிரிந்து தனிக்கட்சிக்கண்ட எம்ஜிஆர் நடுவண் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நேரம், எங்கே நடுவண் அரசின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கோ, இல்லை ஆட்சிக்கலைப்போ வரலாம் என பயந்த கலைஞர், எனவே வழக்கப்படி  தனது கொண்டான் கொடுத்தான் கொள்கைப்படி கச்ச தீவை விட்டுக்கொடுத்தது பற்றி அதிக அழுத்தம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டினை நடுவண் அரசு கிளராமல் பார்த்துக்கொண்டார்.

     தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என நினைத்திருந்தால், பி.சிராய் வழியில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டே கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அல்லது 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சி நாடாளுமன்றத்தினையே கலக்கியிருக்கலாம், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஆதரவு தர தயாராக இருந்தது, ஏன் எனில் அவர்களை பொறுத்தவரையில் கட்சத்தீவு ‘வாலித்தீவு’ ஆகும். ராமனும்,வாலியும் சண்டையிட்டது கட்சத்தீவில் என ராமாயண அடிப்படையில் நம்புகிறார்கள்.

     1974 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை, வலைகாய வைக்கும் உரிமை எல்லாம் இருந்தது, ஆனால் அவ்வுரிமை இலங்கைக்கு பிடிக்கவில்லை, எனவே ஒரு திருத்தம் செய்து, எல்லா உரிமைகளையும் பறிக்க நினைத்து, புதிய ஒப்பந்தம் போட்டது, நமது இந்திய அரசும் கொடுத்தது தான் கொடுத்தாச்சு முழுசாவே கொடுப்போம்னு ரொம்ப தாரளமாக அள்ளிக் கொடுத்துவிட்டது, இம்முறை சின்ன எதிர்ப்பு கூட மாநில அரசிடம் இருந்து வரவில்லை, ஏன் எனில் அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது.

     எவ்வளவு தான் மடங்கிப்போனாலும் விடுவதாகயில்லை, எமர்ஜென்சிக்கு எதிர்ப்புக்காட்டினார்கள் எனக்கூறி தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு செய்யப்பட்டு மிசாவின் கீழ் உடன்ப்பிறப்புகள் எல்லாம் தர்ம அடியும் வாங்கினார்கள்.

 

     இம்புட்டு நடந்தும் 1981 பொது தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக்கூவிய தன்மான சிங்கங்கள் தான் கழகத்தினர்.

     அதுக்கப்புறம் இன்று வரையிலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி என வண்டியோட்டியும் கட்சத்தீவு கைவிட்டு போனது போனதாகவே தான் இருக்கிறது, அம்புட்டு தான் கலைஞரின் இராச தந்திரம்.

     1992 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அ.தி.முக ஆட்சியின் போது கட்சத்தீவினை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார், ஆனால் ஏனோ உடனே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, 2008 இல் தான், மேற்கு வங்க பெருபாரி வழக்கின் அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டுள்ளது, இம்முயற்சி சற்றே காலங்கடந்த ஒன்று என்ற போதிலும் சரியான வகையில் கட்சத்தீவு தமிழகத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பு என ஆவணங்களை காட்டி வாதாடினால் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வர பெருமளவு வாய்ப்புள்ளது.

     சமீபத்தில் கூட வழக்கினை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக சாதிக்க முடியாததை சட்டப்போராட்டத்தின் மூலம் சாதிக்க முடிகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும், நல்ல தீர்ப்பு வர காத்திருப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.