01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாகன சோதனையின்போது எம்-பரிவாஹன், டிஜிலாக்கர், மூலம் காட்டப்படும் கணினிமய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று காவல்துறை பொது இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார். வாகன சோதனை செய்யும் போது, வாகனத்தின் அசல் சான்றிதழ்கள் இருக்க வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. இந்த நிலையில், நடுவண் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிலாக்கர் முறை, நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் செல்பேசி செயலி ஆகியவை குடிமக்களின் ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் அல்லது வேறு ஏதேனும் சான்றிதழ்களை கணினி மயமான வடிவில் வைத்திருக்கக் கூடிய வசதிகளை வழங்குகின்றன. இந்த டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் முறையில் உள்ள மின்னணுவியல் ஆவணங்கள், அசல் ஆவணங்களுக்கு இணையானது என சட்டப்படி அங்கீகாரம் கொண்டதாகக் கருதப்படுகிறது. எனவே, வாகன சோதனையின் போது டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் மூலம் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று காவல்துறை பொது இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,882.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



