அதிமுக ஒரு சர்வாதிகாரக் கட்சி. ஒன் மேன் ஆர்மி என்று ஆங்கிலத்தில் செல்லுவார்களே
அப்படி. எம்ஜியார் அவர்களிடமோ, செயலலிதா அவர்களிடமோ, யார்
வேண்டுமானாலும் கருத்தை முன் வைக்கலாமேயொழிய நிர்பந்திக்க முடியாது; இறுதியாக அவர்கள்தாம்
தீர்மானிப்பார்கள். அதனாலேயே அவர்கள் சில சிறப்பான உணர்ச்சிகரமான முடிவுகளையெல்லாம்
எடுப்பார்கள். அப்படி யெடுத்த பல முடிவுகள் தமிழகத்திற்கு மிகுந்த பயனைத் தந்திருக்கின்றன. மக்கள் அதிமுகவிற்குப் போடுகிற ஓட்டு எம்ஜியாருக்கும்
செயலலிதாவிற்கும் போட்ட ஓட்டு. திமுக கூட்டுச் சிந்தனைக் கட்சி. கலைஞர் தலைவராக இருக்கலாம்; அவர் உணர்ச்சிகரமாக
எந்த முடிவையும் எடுக்க முடியாது; கட்சிக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவருக்கு நிர்பந்தம்
உண்டு. ஒன்னரை லட்சம் தமிழர்கள் ஈழத்தில் கொத்து கொத்தாக கொலை செய்யப் பட்ட போது கூட
உணர்ச்சிகரமான முடிவு திமுகவில் முன்னெடுக்கப் படவில்லை. திமுகவின் கூட்டுச் சிந்தனை முடிவுகள், தமிழர்கள்
வீழ்ச்சிக்குப் பயன்பட்ட அளவு வளர்ச்சிக்குப் பயன்படவில்லை; இத்தனைக்கும் திமுக தமிழர்
மீட்புகளுக்கான கொள்கைகளோடு உருவாக்கப் பட்ட கட்சி. செயலலிதா பெரும்பாலான நேரங்களில் தமிழர்களுக்கு
எதிரான நிலைபாடு உடையவராக இருப்பார். அவரது உணர்ச்சிகரமான முடிவுகள் தமிழர்களுக்கு
பயனாக அமைந்து விடும். திமுக தேவையில்லாத நேரங்களிலெல்லாம் தமிழர் ஆதரவு
நிலைபாடு உடையதாக இருக்கும்; உணர்ச்சகரமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் வியாக்கியானங்களைத்தான்
விடையாகத் தரும். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், தமிழகத்திற்கு நல்லதொரு முடிவு தேவையாக உள்ளது. அந்த முடிவு- தற்போது எண்பது விழுக்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
கையிலும், இருபது விழுக்காடு பாஜக நடுவண் அரசு கையிலும் உள்ளது.
அதிமுக ஆளுமையில் இன்னும் நான்கரை ஆண்டுகள் தமிழகம் நடை போட வேண்டியுள்ளது. சசிகலா- எம்ஜியார், செயலலிதா, பாணியில் கட்சியை எடுத்துச்
செல்லுவார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பன்னீர் செல்வம் அதிமுகவை இனி திமுக பாணியில் எடுத்துச்
செல்ல கட்சியில் அங்கிகாரத்தையும் வெளியில் ஆதரவையும் தேடிக் கொண்டிருக்கிறார். பன்னீர் செல்வம் வெளியிலும் ஆதரவு தேடுவதால், பாவ
பரிதாபத்தில் படிப்படியாக அவருக்கு ஆதரவு கூடிவருகிறது. ஒருவேளை பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்தாலும், கட்சியில்,
வெளியில், ஊடகங்களில், நடுவண் அரசில் என்று ஏராளமான நிர்பந்தம் இருக்கும். கட்சியையும் வளர்க்க முடியாது; நல்ல ஆட்சியையும்
தரமுடியாது; வரலாறு காணாத தமிழ் இளைஞர் அறவழிப் போராட்டத்தில்- தொடக்கத்தில் ஒரு மாதிரி இயல்பாகவும், முடிவில்
வேறுமாதிரி நடுவண் அரசுக்குப் பணிந்து மேற்கொண்ட வன்முறை போலவும் சொதப்ப நிர்பந்தப்
படுத்தப்படுவார். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தோன்றாமல் பன்னீர்செல்வமே
முதல்வராகத் தொடர்ந்திருந்தால் ஏதோ ஒருவகையாக ஆட்சி போய்க் கொண்டிருந்திருக்கும். இவ்வளவுக்குப் பிறகு பன்னீர்செல்வம் ஆட்சி தொடருமேயானால்
அந்தக் காலத்தில் தமிழகத்தில் இருந்த பக்தவச்சலம் ஆட்சியாகத்தான் இருக்கும். அதற்குப் பதிலாக ஆளுநர் ஆட்சியே அறிவிக்கலாம்! பாஜக
புண்ணியத்தில் தமிழகம் புதிய எழுச்சியை நோக்கிப் பயணப்படும்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



