22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்வதில் இனிமேல் நடுவண் அரசு குறுக்குசால் ஓட்ட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கினார். உச்ச அறங்கூற்று மன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழுபேர் விடுதலை குறித்த உச்ச அறங்கூற்று மன்ற தீர்ப்பு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நன்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்த போதும் கடந்த 4 ஆண்டுகளாக நடுவண் அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. தற்போது 161-வது பிரிவு படி ஏழு பேரையும் விடுதலை செய்வதை மாநில அரசு முடிவெடுக்கலாம் என்னும் உச்சஅறங்கூற்று மன்ற தீர்ப்பு விமோசனத்துக்கு வழி வகுத்துள்ளது. தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி அரசின் முடிவை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். இனிமேல் நடுவண் அரசு ஏழுபேர் விடுதலையில் குறுக்குசால் ஓட்ட முடியாது என்று கூறினார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று விசாரித்த உச்ச அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது. 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து நடுவண் அரசு சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் முடித்து வைத்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,903.
ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச அறங்கூற்று மன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலையில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தரப்பில் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



