சொத்துக்குவிப்பு
வழக்கில் இருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று
காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் நான்கு வகையாக தீர்ப்பு அளிக்கப்படலாம்
என எதிர்பார்க்கப்படுவதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலாவைத் தமிழக முதல்வராக்கும் அதிமுகவினர்
முயற்சியின் போக்கை நிர்ணயிக்கப் போகும் தீர்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த செயலலிதா
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற
நீதிஅரசர் குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , செயலலிதா, சசிகலா,
இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார். இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிஅரசர் குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு
மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிஅரசர்கள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் அமர்வு
விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த
வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார்.
அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிஅரசர் பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.
சொத்து குவித்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் பினாக்கி கோஷ்,
அமித்வா ராய் அமர்வு இந்த தீர்ப்பினை அளிக்க உள்ளது. செயலலிதா மரணமடைந்து விட்டதால்
அவருக்கு தண்டனை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் இத்தீர்ப்பு
அதிமுகவின் போக்கை தீர்மானிக்கப் போகும் தீர்ப்பு என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது. நான்கு வகையான தீர்ப்பு 1. கர்நாடக உயர்நீதிமன்ற
தீர்ப்புபடி அவர்கள் விடுதலை செய்யப்படலாம். 2. இரு நீதிஅரசர்களால்
மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்படலாம். 3. கீழ்நீதிமன்றம்
வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தலாம். 4. மீண்டும் கர்நாடகா
உயர்நீதிமன்றத்திற்கோ, சிறப்பு நீதிமன்றத்திற்கோ வழக்கை மறு விசாரணைக்கு மாற்றலாம்.
உச்ச நீதிமன்ற 2 நீதிஅரசர்களும் தனித்தனியாக
மாறுபட்ட தீர்ப்பளித்தால், அதாவது ஒரு நீதிஅரசர் மேல்முறையீட்டு மனுவை ஏற்று கர்நாடக
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தாலும், மற்றொரு நீதிஅரசர் மேல் முறையீட்டு
மனுவைத் தள்ளுபடி செய்தாலும் வழக்கின் முடிவு எட்டப்படாத நிலை ஏற்படும். அப்போது,
3வது ஒரு நீதிஅரசரிடம் இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு மாற்றப்படும். அவர்
வழங்கும் தீர்ப்பு அடிப்படையில் பெரும்பான்மைத் தீர்ப்பு நடைமுறைக்கு வரும். சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின்
தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டால் விசாரணை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு
சிறைத் தண்டனை உறுதி செய்யப்படும். அப்போது, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சம்மந்தப்பட்ட
விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மேலும், தீர்ப்பு நகல் அரசுத் தரப்பிடம் கிடைத்தவுடன்
சம்மந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கையைத் தொடர்வார்கள். தண்டனை பெற்றவர்களை
உடனடியாக கைது செய்து சிறையில் அடைப்பார்கள். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு,
மீண்டும் மறு விசாரணைக்காக, கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டால், விசாரணை
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகும். 4 ஆண்டு சிறைத் தண்டனை என்பது உறுதிப்படுத்தப்படும்.
ஏற்கனவே பிணையில் இருப்பதால் மீண்டும் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 6 ஆண்டுகளுக்கு
தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் சசிகலாவிற்கு மாற்று முதல்வர்
ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அவர் பன்னீர் செல்வம் போல ஆகிவிடக் கூடுமோ என்கிற அச்சம்
இருக்கும். இன்றைய தீர்ப்பில் செயலலிதா, சசிகலா, சுதாகரன்,
இளவரசி ஆகியோரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால்
4 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். சசிகலா முதல்வராக
பதவியேற்க தடையேதும் இருக்காது. அப்படியே முதல்வராக பதவியேற்றாலும் 6 மாதத்திற்குள்
தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். அதன் பின்னரே அவர் முதல்வராக நீடிக்க முடியும்.
கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கியுள்ள
சசிகலா, நாம் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக செவ்வாய்கிழமை கிளம்புவோம் என்று கூறினார்.
இன்றைய நாள்
சசிகலாவிற்கு மகிழ்ச்சியை வழங்கி அதிமுகவை தெளிவாக எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை
உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தீர்மானிக்கும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



