மகளிடம், “நீ என்னிடம் பேச நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்ட அப்பா. அதற்கு, “இனி நீ அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அப்படி செய்தால் நான் உன்னுடன் பேசுகிறேன்” என தெரிவித்த மகள். கதை அல்ல உண்மையில் நடந்தது. 07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தில் சிவக்குமார் வீடும் இடிந்தது. இதனை ஓரளவு சரி செய்து குடியிருந்து வரும் இவருக்கு, தொடர்ச்சியாக சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தாயுடன், தந்தை சண்டை போடுவதை நேரில் கண்ட 12 அகவை மகள், தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு பேசுவதை நிறுத்தி விட்டார். 8 மாதத்திற்கு மேலாக மகள் தன்னிடம் பேசாததை நினைத்து சிவக்குமார் வேதனையில் இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மகளிடம் “நீ என்னிடம் பேச நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “இனி நீ அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அப்படி செய்தால் நான் உன்னுடன் பேசுகிறேன்” என தெரிவித்துள்ளார். மகளின் அன்புக்காக களமிறங்கிய சிவக்குமார், கடந்த 2 நாட்களாக சரிவர சாப்பிடாமல் ஊர் குளத்தில் இறங்கி அதில் கிடந்த நெகிழி கழிவுகள், மரம், செடிகள் அனைத்தையும் அகற்றி அந்த குளத்தை முற்றிலும் தூய்மை செய்தார். இதற்கு அவரின் மனைவி அருள்மொழி துணையாக இருந்தார். இதனையடுத்து மகள் தனது தந்தையை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டதோடு நேற்று முதல் பேச தொடங்கினார். இதனைக் கண்ட கிராம மக்கள் அனைவரும் அன்பான குடும்பத்தின் சமூக அக்கறையை பாராட்டி மகிழ்ந்தனர். ஊர், நகரம், நாடு என்கிற சமுதாயம் பெரிய குடும்பம்தான். குடும்பத்தை நம் பழந்தமிழ் முன்னோர், மாதிரிச் சமுதாயமாக கட்டமைத்துத் தந்தபடிதான் தமிழ்க் குடும்பம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. இது போன்ற இனிய நிகழ்வுகள் தமிழ்க் குடும்பங்களில் எளிதாகக் காணக் கிடைப்பதுதான். சங்க காலத்தில் நம்முடைய தமிழ்ச் சமுதாயமும் இவ்வாறுதான் கட்டமைந்திருந்தது. நடப்புச் சமுதாயத்தில்தான், தலைக்கவசம் அணியவில்லை என்று, காவலர்களிடம் (யாருக்கு காவலர்கள் என்றுதான் தெரியவில்லை) இருந்து தப்பி லாரியில் கால்களை இழக்கும் அவலம் எல்லாம் அரங்கேற்றப் படுகிறது. ஐயாயிரம் பத்தாயிரம் ஆண்டுகளாக தமிழ்க்குடும்பத்தில் முன்னெடுக்கப் படுகிற தண்டனையே இனிய நடவடிக்கைகளாக, சட்டம், காவல்துறை, அறங்கூற்றுமன்றம் எல்லாம் முன்னெடுக்க முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,285.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.