28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து தொடங்குகிறது காளிங்கராயன் பாசன வாய்க்கால். சுமார் 750 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வாய்க்காலின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. இதில் நெல்,கரும்பு,வாழை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை உழவர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். குறுநில மன்னரான காளிங்கராயன் இந்த பாசன வாய்க்கால் அமைத்தபோது தன்னுடைய வாரிசுதாரர்கள் இந்த தண்ணீரை பயன்படுத்த மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்துள்ளார். அதனை தற்போதும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். உழவர்களுக்கு உதவி செய்த காளிங்கராயனுக்கு சிலைஅமைக்க வேண்டும் என்பது உழவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும். இதனை ஏற்று 1.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியிலேயே முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை மறுநாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து காளிங்கராயன் வாரிசுகளை கௌரவிக்கிறார். இவ்விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அமைக்கப்பட்ட காளிங்கராயன் சிலை கம்பீரம் இல்லாமல் இருப்பதாகவும் முகத்தோற்றத்தில் மாற்றம் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. காளிங்கராயன் சிலையின் முகத் தோற்றத்தை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஏற்கனவே அறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,784.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



