Show all

ஸ்டாலின் காய் நகர்தலில் தான் இருக்கிறது! தமிழக அரசியல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் எதிர்காலம்

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது. ஆனால், நாற்பதும் நமதே என்ற செயலலிதா கருத்துப் பரப்புதலால், திமுக கூட்டணி தவிடுபொடியாகிவிட்டது.

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதேநேரம், மோடியின் பாஜக கூட்டணி கூட கன்னியாகுமரி மற்றும் தருமபுரி ஆகிய 2 பாராளுமன்ற  தொகுதிகளை வென்றது. மற்றவை அதிமுக வசம் சென்றன.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலிலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பை தவறவிட்டது. இதில் திமுக மட்டுமே 89 தொகுதிகளில் வென்றது. திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் மீதான மக்கள் அதிருப்திதான் காரணம் என்று, பேச்சு அடிபட்டது. இதனால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களையே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதை காங்கிரஸ் விரும்பவில்லை.

இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநரும், தலித்திய அரசியலை திரைப்படத்தில் கூறுபவருமான இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்தடுத்த மாதங்களில் டெல்லியில் சந்தித்து பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கம் காட்டுவதாக தெரிகிறது. திமுகவுக்கு கிலியூட்டி அதிக இடங்களை பெறும் முயற்சியா இது என பேசப்பட்ட நிலையில் புது திருப்பம் நிகழ்ந்துள்ளது.

நியூஸ் 18 தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார் என கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், திமுக, அதிமுக தவிர்த்து பாமக தலைமையேற்க தயாராக உள்ள கட்சியுடன்தான் கூட்டு என்றும் கூறியுள்ளார். 

திமுகவுடன் கூட்டணி இல்லை என கூறும் ராமதாஸ், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்று கூறியுள்ளதை எப்படி புரிந்து கொள்வது? திமுக கூட்டணியை உதறி வாருங்கள், நாங்கள் இருக்கிறோம் என்று காங்கிரசுக்கு பாமக விடுக்கும் அழைப்புதான் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலம், காங்கிரசின் கரம் வலுவடைந்துள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் பேரம் பேசி பணிய வைக்க சிறந்த வாய்ப்பை காங்கிரஸ் இப்போது பெற்றுள்ளது.

தமிழகத்தில் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கு காங்கிரசுக்கு இல்லை. இதுவே வாக்கு விழுக்காடுகள் உணர்த்தும் பாடம். ஆனால், பாமக, கமல் கட்சி, தினகரன் கட்சி என பிற 2ம் கட்டத்திலுள்ள கட்சிகளை காங்கிரஸ் அரவணைத்து கூட்டணி அமைத்தால் திமுக வாக்கு வங்கியில்தான் அது ஓட்டையை போட்டு வாக்குகளை உறிஞ்சும். எனவே, காங்கிரசின் வியூகம் திமுகவுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கே சாதகமாக மாறக்கூடும்.

அதிமுக ஆட்சி கலைந்து பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வந்திருந்தால், திமுக உறுதியாக ஆட்சியைக் கைப்பற்றியிருந்திருக்கும்; தினகரன் இரண்டாது இடம் பெற்றிருப்பார்; எடப்பாடி- பன்னீர் அதிமுக அடையாளம் இல்லாமல் போயிருந்திருக்கும். 

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் இடையில் வந்து விட்டதால் நாற்பதும் நமதே என்று செயலலிதா போல் ஸ்டாலினால் வென்றெடுக்க முடியுமா என்பது கேள்விக் குறிதான். 

தமிழக மக்கள் பாஜகவையும், எடப்பாடி- பன்னீர் அதிமுகவையும் வேரோடு களையத் திட்டமிட்டிருந்த வேளையில், இரண்டு கட்சிகளுக்கும் உயிர் கொடுக்கிற ஓடிப்பிடித்தல் விளையாட்டு தமிழக அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விளையாட்டில், பாஜக, அதிமுக உயிர் பிழைக்கும்; பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் வளரும்; திமுக தேயும் என்பதாகத் தெரிகிறது. ஸ்டாலின் அறிவாற்றலில்தான் மாற்றம் நிகழ முடியும்; ஸ்டாலின் சரியாக காய் நகர்த்துவாரா?

ஸ்டாலின் காய் நகர்தலில் தான் இருக்கிறது! தமிழக அரசியல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் எதிர்காலம்; தமிழகத்தின் எதிர்காலமும்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.