Show all

தமிழில் நிலையாமை குறித்துப் பேசுவது காஞ்சித் திணையாகும். தமிழகத் தலைவர்களை காஞ்சித்திணையில் ஆய்வோமா!

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆங்கிலேயர் வரவுக்குப் பிந்தைய, தமிழக மக்களாட்சி முறைக்கு வெறுமனே தொன்னூற்று எட்டு ஆண்டுகால வரலாறே உண்டு. அந்த தொன்னூற்று எட்டு ஆண்டுகாலத்தில், இருபத்தி ஏழு ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அமைந்த மக்களாட்சியாகும். அந்த இருபத்தி ஏழு ஆண்டுகளில் பதினேழு ஆண்டுகள் நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. மீதி பத்து ஆண்டு காலம் காங்கிரசு கட்சியின் ஆட்சி நடைபெற்றது.

இந்த இருபத்தி ஏழுஆண்டுகாலத்தில் தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள்  1.ஏ.சுப்பராயலு 2.பனகல் ராஜா 3.பி.சுப்பராயன் 4.பி.முனுசுவாமிநாயுடு 5.ராமகிருஷ்ணரங்காராவ் 6.பி.டி.இராஜன் 7.ராமகிருஷ்ணரங்காராவ் 8.கூர்மாவெங்கடரெட்டிநாயுடு 9.சி.இராஜகோபாலாச்சாரி 10.த.பிரகாசம் என பத்து பேர்கள். இதில் முதல் எட்டு பேர்கள் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அடுத்த இரண்டு பேர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 

அடுத்து இந்தியா விடுதலை பெற்றதற்கு பிறகு மக்களாட்சி முறையானது கடந்த எழுபத்தியோரு ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில் முதல் இருபது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலம். அதில் முதல் இரண்டு முதல்வர்கள் காலத்தில் அவர்கள் தலைமை அமைச்சர்கள் என்று அழைக்கப் பட்டார்கள் அப்போது ஆந்திராவும் கேரளாவும் கருநாடகமும் தமிழகத்தோடு இருந்தன. அந்த இரண்டு தலைமை அமைச்சர்கள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். மற்றும் குமாரசாமி ராஜா ஆகியோரும் ஆவர். ஆட்சி காலம் மூன்று ஆண்டுகள்.

மக்களாட்சியின் மீதமுள்ள அறுபத்தி எட்டு ஆண்டு காலத்தில் முதல் பதினேழு ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடை பெற்றது. ஆண்டவர்கள் குமாரசாமிராஜா, இராஜகோபலாச்சாரி, காமராசர், பக்தவச்சலம் ஆகியோர்.

அடுத்து தமிழகத்தின் ஆட்சி திமுகவின் வசம் வந்தது. அண்ணாத்துரை அவர்களின் ஆட்சி இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. அடுத்து நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு கிழமை காலம் தமிழகத்தை ஆண்டார்கள். அடுத்து கருணாநிதி அவர்கள் ஏழு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டார்கள். அடுத்து தமிழக ஆட்சியை நடுவண் காங்கிரஸ் கட்சி கலைத்து விட்டு குடிஅரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்தியது. குடிஅரசுத் தலைவர் ஆட்சி ஆறு மாதங்கள் நடந்தன. 

அடுத்து தமிழக ஆட்சியை அதிமுக கைப்பற்றியது. எம்ஜியார் அவர்கள் மூன்று ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்டார்கள். எம்ஜியார் ஆட்சியையும், நடுவண் காங்கிரஸ் கட்சி கலைத்து விட்டு குடிஅரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்தியது. குடிஅரசுத் தலைவர் ஆட்சி நான்கு மாதங்கள் நடந்தன. மீண்டும் எம்ஜியார் அவர்கள் தமிழக ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அவர் தமிழகத்தை ஆண்ட காலம் ஏழு ஆண்டுகள்.

எம்ஜியார் அவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் நெடுஞ்செழியன் அவர்கள். அவர் இரண்டு கிழமைகள் ஆட்சியில் இருந்தார். பின்னர் எம்ஜியார் அவர்களின் மனைவி ஜானகி அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்கள் ஆட்சியிலிருந்த காலம் மூன்று கிழமைகள். பிறகு மீண்டும் அதிமுக ஆட்சி நடுவண் அரசில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிவ் காந்தியால் கலைக்கப் பட்டு குடிஅரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்தியது. முன்பு இரண்டு முறை தமிழக ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி. அவர் கருணாநிதி ஆட்சியை ஒரு முறையும், எம்ஜியார் ஆட்சியை ஒரு முறையும் கலைத்தார். இம்முறை குடிஅரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் ஓராண்டு காலம் நடந்தது. 

அடுத்து தமிழகத்;தின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியவர் மீண்டும் கருணாநிதி. அவர்கள் தமிழகத்தை ஆண்ட காலம் இரண்டு ஆண்டு காலம் மீண்டும் நடுவண் அரசில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்த சமஜ்வாடி ஜனதா கட்சியை சேர்ந்த வெறுமனே ஆறு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த சந்திரசேகர் அவர்களால் ஆட்சி கலைக்கப் பட்டது. குடிஅரசுத் தலைவர் ஆட்சி ஆறுமாதங்கள் நடந்தன. 

அதன் பிறகு தமிழகச் சட்ட மன்றத்தேர்தலோடு நடந்த இந்தியப் பாரளுமன்ற தேர்தலில், இராஜிவ் காந்திபடுகொலையினூடே நடைபெற்ற அந்தத் தேர்தலில் நடுவண் அரசில் காங்கிரசுக்கும் (பிவிநரசிம்மராவ்) தமிழகத்தில் செயலலிதா அவர்களுக்கும் ஆட்சி கிடைத்தன. செயலலிதா அதிமுக ஆண்ட காலம் ஐந்து ஆண்டுகள்.

மீண்டும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவின் கருணாநிதி அவர்கள் தமிழக ஆட்சியைக் கைப்பற்றினார். ஆண்ட ஆட்சி காலம் ஐந்து ஆண்டுகள்.

மீண்டும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியிழக்க அதிமுக செயலலிதா ஆட்சியைக் கைப்பற்றினார். செயலலிதா தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு மாத காலத்தில் ஒரு வழக்கின் காரணமாக, முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டியிருந்ததால் பன்னீர் செல்வம் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார். பன்னீர் செல்வம் தமிழகத்தை ஆண்ட காலம் ஆறுமாதங்கள். 

செயலலிதாவின் வழக்கின்  விடுதலையால் மீண்டும் செயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவர் ஆட்சியிலிருந்த காலம் நான்கு ஆண்டுகள்.

மீண்டும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவின் கருணாநிதி தமிழக ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் தமிழகத்தை ஆண்ட காலம் ஐந்து ஆண்டுகள்.

மீண்டும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்று அதிமுக செயலலிதா தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றார். மீண்டும் நான்கு மாத காலத்தில் வேறொரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால் பன்னீர் செல்வம் தமிழகத்தை ஆளும் பொறுப்பை யேற்றார். அவர் ஆண்ட காலம் எட்டு மாதங்கள். மீண்டும் வழக்கில் வேறொரு அறங்கூற்றுவர் மாற்றப் பட்ட தீர்ப்பால் செயலலிதா விடுதலையாகி தமிழக ஆட்சிப் பொறுப்பை யேற்றார். அந்த ஆட்சி காலத்தில் தான் அவர் மரணம் அடைந்தார். அவரின் மரணம் வரை அவர் தமிழகத்;தை ஆண்ட காலம் முழுமையாக ஆறு மாதங்கள் மட்டுமே.

மீண்டும் பன்னீர் செல்வம் ஆட்சிப் பொறுப்பேற்கிறார். அவர் ஆண்ட காலம் இரண்டு மாதங்கள். அதன் பிறகு தமிழகத்தை ஆளும்  பொறுப்பேற்று கடந்த ஒன்னரை ஆண்டு காலமாக தமிகத்தை ஆண்டு வருபவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

தமிழில் நிலையாமையை உணர்த்துவதற்காக எழுதப் பட்ட இலக்கியம் மதுரைக்காஞ்சி ஆகும். இது பதினெண் மேல்கணக்கு நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் ஒன்றாகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் பெருமகனார் மாங்குடி மருதனார் ஆவார். இது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அவர்கட்கு பாடியது ஆகும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இளம் அகவையிலேயே அரியணை ஏறி நீண்ட காலம் நல்லாட்சி புரிந்தவன் என்று இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு நிலையாமையை பாடினார் புலவர் பெருமகனார் மாங்குடி மருதனார் அவர்கள்.

நாம் தமிழகத் தலைவர்களை காஞ்சித்திணையில் ஆய்வு செய்த முயற்சி: வரலாற்றைச் சுட்டிக் காட்டி, இந்த ஆட்சிக்காகவா, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், விஜய்காந்த், சீமான். கமல், அன்புமணி, தினகரன், ரஜினி, விஜய், பன்னீர் எடப்பாடி, வேல்முருகன், அழகிரி, கனிமொழி என்று மிகப் பெரும் வரிசையில் அணிதிரள்கின்றீர்கள்? 
சரி எவ்வளவு காலம் நிற்கப் போகின்றீர்கள்? அந்த நிற்கும் காலத்தில் என்ன சாதிக்கத் திட்டம்? இதுவரை நிற்க முடியாமல் போனவர்கள் சாதிக்காத எதையாவது சாதிக்கும் எண்ணம் உண்டா? கருவிகளே இல்லாத காலத்தில் தமிழின் புகழை உச்சாணிக் கொம்பில் வைத்திருந்தார்கள் நம் பழந்தமிழ் மன்னர்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்; நின்றார்கள்; சாதித்தார்கள். அவர்களே நிலையாமை பற்றி யோசித்தார்கள். அற்ப காலம் மட்டுமே நிற்க முடிகிற நீங்கள் அவர்களை விட விரைவாக செய்து முடிக்கப் போவது என்ன? சிந்தியுங்கள்! தமிழகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,923.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.