Show all

அதிமுக தமிழகத்தில் அழுத்தமாக காலூன்ற கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு கீழடி! எம்ஜியாருக்கு சத்துணவு போல

தமிழர் தொன்மை மீட்பில்: இதுவரை இந்தியாவை ஆண்ட அனைத்து அரசுகள், தற்போது பாஜக அரசு (கீழடி ஆய்வை ஊத்தி மூட முயன்றமை) முன்னெடுத்து வந்த சூழ்ச்சிகளை முறியடித்து வரலாற்று சாதனை புரிந்திருக்கிறது அதிமுக அரசு. அதிமுக அரசின் இந்தச் சாதனையை மனம் திறந்து பாராட்டி, தமிழர் தொன்மை மீட்பில், அதிமுக அரசு மென்மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிப்போம்.    

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிமுக தமிழகத்தில் அழுத்தமாக காலூன்ற கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு கீழடி! எம்ஜியாருக்கு சத்துணவு போல. செயலலிதா அவர்களுக்கோ, கருணாநிதி அவர்களுக்கோ இப்படியானதொரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்க வில்லை என்பதை மனந்திறந்து ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.  

அதிமுக- பாஜகவின் தமிழகக் கிளை. பாஜகவால் தான் அதிமுக ஆட்சி நிலைத்திருக்கிறது. அதிமுக பாஜகவின் கொத்தடிமையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் காரணங்கள் கட்டாயமாக உண்டு. 

நீட், காவிரிச்சிக்கல், சேலம் சென்னை எட்டு வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மாநில வரிவாங்கும் உரிமையை விட்டுக் கொடுத்து சரக்கு- சேவை வரி, ஒரேநாடு ஒரே குடும்ப அட்டைக்கு ஒப்புதல், தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

ஆனால் நீண்ட நெடுங்காலமாக, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்தே, தமிழர் தொன்மை மீட்டெடுக்கப் பட்டு விடக் கூடாது என்பதில் பாஜக, காங்கிரஸ், ஆர்எஸ்எஸ், மற்றபல பார்ப்பனிய அமைப்புகள், உலகில் சிலபல நாடுகள் எல்லாம் கவனமாக செயல்பட்டு வந்திருக்கின்றன. பாஜக அரசு கீழடி ஆய்வை திட்டமிட்டு ஊத்தி மூட முயன்றது. 

ஆனால் அதிமுக தமிழ்நாடு அரசு, மிகத்துணிச்சலாக கீழடியில் நான்காம் கட்ட ஆய்வை நடத்தி, உலகத் தமிழர்கள் தங்கள் தொன்மை குறித்து பெருமிதம் கொள்ளவும், தலைநிமிரவும் உன்னதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

மேலுமாக, இந்த வெற்றியின் உற்சாகம் குன்றாமல், கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வையும் தமிழன் தொன்மை மற்றும் நாகரிகச் சிறப்பு மீட்பிற்காகவும் தொடர்ந்து பணியாற்ற களம் இறங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.  

நான்காம் கட்ட கீழடி ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி ஆய்வுகளை நடத்தவும் மாநில தொல்லியல் துறை திட்டமிடுகிறது.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த முடிவுகள் கடந்த கிழமை வெளியிடப்பட்டன. அங்கே கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மாநில தொல்லியல் துறை கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த அகழாய்வில் பாரம்பரியமான முறைகளைத் தவிர, அகழாய்வுக்கான சரியான இடங்களைக் கண்டறிய பல புதிய தொழில்நுட்பங்களையும் மாநில தொல்லியல் துறை பயன்படுத்தியுள்ளது.

கீழடி கிராமத்தைச் சுற்றி சுமார் 15 சதுர கி.மீ. பரப்புக்கு தொல்லியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக்கிக்கின்றன. ஆகவே, எந்த இடத்தில் அகழாய்வை நடத்துவது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முதற்கட்டப் பணி. இதற்கு முன்பாக, தரைமேல் நடத்தப்படும் ஆய்வின் மூலமாகவே இந்த இடங்கள் தீர்மானிக்கப்படும்.

ஆனால், இந்த முறை அகழாய்வை தொடங்குவதற்கு முன்பாக, செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு மேக்னடோமீட்டர் மற்றும் தெர்மோ மேப்பிங் முறைகளை வைத்து நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரடார் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

முதலில், கீழடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பாக இந்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பானை ஓடுகள், உலோகக் கருவிகள் ஆகியவை கிடைத்திருந்த நிலையில், நிலத்தடியில் உள்ள தனிமங்களை அடையாளம் கண்டுவிட்டு, பிறகு அங்கு அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி களிமண், பெரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் நிலத்தடியில் உள்ள சுவர்களை கண்டறியும் வகையிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

450 ஏக்கர் பரப்பில் பத்து முதன்மையான இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதற்குப் பிறகு, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோமேக்னடிசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இடத்தை மேக்னெடோமீட்டர் மூலம் தரைவழியாக ஆய்வுசெய்தனர்.

இந்த மேக்னடோ மீட்டர்களை வைத்து, கீழடியில் பூமிக்கடியில் புதைந்திருந்த 350 மீட்டர் நீளச் சுவர் கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தடியை ஆராயும் ஜிபிஆர் மூலம், அகழாய்வுக்குச் சரியான இடம் கண்டறியப்பட்டது.

இதிலிருந்து கிடைத்த முடிவுகளை வைத்துக்கொண்டு, தற்போது கீழடியில் நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் கச்சிதமான இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுவருவதால், அடுத்தடுத்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பான முடிவுகளைப் பெற முடியுமென தொல்லியல் துறை நம்புகிறது.

கீழடியில் மட்டுமல்லாமல், தற்போது உலகம் முழுவதுமே அகழாய்வுகளைத் தொடங்குவதற்கு முன்பாக, உள்ளே புதைந்திருக்கும் சுவர், கட்டட அமைப்புகள், பானைகள், செங்கல்கற்கள், கூரை ஓடுகள், தீமூட்டும் இடங்கள், பாதைகள், நினைவுக் கற்கள் ஆகியவற்றை கண்டறிய இம்மாதிரி மேக்னடோ மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழக அரசின் தொல்லியல் துறை வரும் நடப்பு ஆண்டில் கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வைத் தொடரவிருப்பதோடு, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களிலும் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் அகழாய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. விரைவிலேயே கடலடி ஆகழாய்வுகளையும் செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

மேலும், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இடங்கள் எவை என்பதை ஆராய்வதற்கான கள ஆய்வும் இந்த ஆண்டு நடத்தப்படவிருக்கிறது.

இதுதவிர, தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் தொல்லியல் தளங்களைக் கண்டறியும் ஆய்வும் நடத்தப்படவிருக்கிறது. இங்கு இடைக் கற்காலப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் தொடங்கப்படவிருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கான களமாக அடையாளம் காணப்பட்ட ஒரு இடம். இங்குள்ள புதைமேட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1876ஆம் ஆண்டிலும் 1904ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இதற்குப் பிறகு அண்மைக் காலத்தில், 2003 முதல் 2005ஆம் ஆண்டுவரை இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. இருந்தபோதும் இது தொடர்பான ஆய்வறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்படி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவும் இட்டுள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெங்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், மட்பாண்டங்கள் உள்ளிட்டவை கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது.

கடந்த கால ஆய்வுகளில் தொல்லியல் கால மக்கள் புதைக்கப்பட்ட மேடுகளே ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட நிலையில், தொல்லியல்துறை இனி மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில், மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை நோக்கி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். 1985லிருந்தே இந்தியத் தொல்லியல் துறை, மாநில அரசின் தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை அகழ்வுகளைச் செய்திருக்கின்றன. அந்த அகழ்வுகளில் பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்ககாலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

கல்மணிகள், இரும்பு உருக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இங்கு இருந்ததும் கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன.

அதற்குப் பிறகு, இது தொடர்பான ஆய்வுகள் தொடராத நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது.

தொல்லியல் மேடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வது தவிர, ஆழ்கடல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவும் மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மாநில தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கிரேக்கம், ரோம், அரபு நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்த வணிகத் தொடர்புகளை ஆராயும் வகையில் சங்ககாலம் மற்றும் இடைக்காலங்களில் துறைமுகங்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலத் தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,284.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.