Show all

சசிகலா கடந்து வந்த பாதை! ஓர் அலசல்

அதிமுக பொதுச் செயலராக சிறைக்குச் சென்ற சசிகலா, அதிமுக கொடியோடு சென்னை வருகிறார். இடைப்பட்ட காலத்தில் அவரின் பதவி பறிக்கப்பட்டது. தொண்டர்களையும் உறங்கும் விதைகளையும் கொண்டு அமமுக உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளியில் வந்துள்ள சசிகலா இயங்கப் போவது அதிமுக- அமமுக இந்த இரண்டுகளில் எதில்?

26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து சசிகலா தமிழகம் திரும்பும் நிலையில், சசிகலா கடந்து வந்த பாதை குறித்து திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு முயற்சி இந்த அலசல்.

நாளது 20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5117 (05.12.2016) அன்று தமிழகத்தின் முதலமைச்சரும், அதிமுக பொதுசெயலாளருமான செயலலிதா காலமானதை அடுத்து, அன்றிரவே சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி சட்டமன்ற குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தனர். அதன்பிறகு தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

ஒன்றியத்தில் ஆளும் பாஜகவிற்குப் பயந்து, ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை- பாஜகவின் நோக்கத்திற்கு வழிநடத்தி திராவிட இயக்கங்களின் அடிப்படை நோக்கச் சிதைப்பிற்கு காரணமாகிவிடக்கூடும், என்ற தொலைநோக்கில், கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்து- ‘செயலலிதா காலத்தில் நிழலாக கட்சியை வழிநடத்தி வந்த நீங்களே, அம்மாவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்துவது, கட்சிக்கான நோக்கம் மாறாத வழிநடத்துதலாக அமையும்’ என்று கோரிக்கை வைத்தனர். 

அதன் விளைவாக, அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு ஒருமனதாக கட்சியின் பொதுசெயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அதிமுக கட்சியின் 6-வது பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்றார்.

அதன் தொடர்ச்சியாக தம்பிதுரை, சைதை துரைசாமி உள்ளிட்டோர் சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சசிகலாவை முதலமைச்சராக முன்னிறுத்தி முழக்கம் ஒலிக்கத் தொடங்கியதும் அதிமுகவில் குழப்பங்களும், சச்சரவுகளும் எழத் தொடங்கின. 

சல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக சல்லிக்கட்டு சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் நடுவே செல்வாக்கு பெருகி விட்டதாக ஒரு தோற்றம் பன்னீர்செல்;வம் தரப்பில் உருவாக்கப்பட்டது. 

இதையடுத்து, முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதும், எந்நேரமும் சசிகலா முதலமைச்சராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் மும்பையில் தங்கவைக்கப்பட்டு சசிகலாவின் பதவியேற்பு விழா தள்ளிப்போகும் வகையாக ஒன்றிய பாஜக காய் நகர்த்தியது.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சமாதிக்கு திடீரென வந்த ஓ.பன்னீர்செல்வம், 40 நிமிடங்கள் கண்மூடி அமர்ந்து தியானம் செய்தார். தன்னைக் கட்டாயப்படுத்தி பதவிவிலகல் கடிதம் பெற்றுவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிரான முதல் களமாடலை வெற்றிகரமாக வடக்கின் ஆலோசனைக்கு ஏற்ப சிறப்பாக முன்னெடுத்தார். 

ஓ.பன்னீர்செல்வத்துடன் மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்தனர். அதற்கு மறுநாள் அதிமுக தலைமையகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நடுவே உரையாற்றிய சசிகலா, துரோகங்கள் ஒருபோதும் வென்றது கிடையாது என்றும், அதுநாள்வரை செயலலிதாவிற்காக வாழ்ந்ததாகவும், இனி அவரது கனவுகளுக்காக வாழ்வேன் என்றும் அறிவித்தார்.

அதன்பின் சசிகலா தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 130 பேரை அணி தாவாமல் இருக்க கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தார். இந்நிலையில், சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு நெருக்குதல் தந்து விரைவு படுத்தப்பட, எதிர்பார்த்தபடி, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குச் சிறைத் தண்டனையை பெங்களூரு சிறப்பு அறங்கூற்றுமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, சசிகலா ஆலோசனையில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சரணடைய பெங்களூரு புறப்படும் முன்னதாக செயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சமாதியில் கையால் அறைந்து துரோகிகளுக்கு எதிரான அறைகூவலும் விடுத்தார். அதைத்தொடர்ந்து பெங்களூரு சென்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான நெருக்கடி தரப்பட்டு, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவோடு இணைக்க ஒன்றிய பாஜக முன்னெடுத்த களமாடல் வெற்றியாக முடிந்தது. பாஜக ஒருங்கிணைத்த அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுசெயலாளர் பதவியில் இருந்து நீக்கியது. 

இதனை எதிர்த்து சசிகலாவிற்காக சட்டப்போராட்டம் நடத்தி வந்த தினகரன், சட்டமன்ற உறுப்பினராக வென்று, பல அதிரடி வருமான வரித்துறை சோதனைகளையெல்லாம் கடந்து, அமமுக என்ற கட்சியை பதிவு செய்து, தொண்டர்களையும், அதிமுகவிற்குள் உறங்கும் விதைகளையும் தக்கவைத்து வந்து கொண்டிருக்கிறார். தற்போது தண்டனை காலம் முடிந்து சென்னை திரும்பிய பின் சசிகலா அவர்களால் என்னவிதமான தாக்கம் ஏற்படப்போகிறது? அதிமுகவை வசப்படுத்துவாரா? பொறுதிருந்து பார்க்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.