தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என்று கூறப்படும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரௌடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் 44 அகவையுள்ள ரௌடி ஸ்ரீதர் புதன்கிழமை மாலை சயனைட் அருந்து தற்கொலை செய்து கொண்டார். மாலை 6.30 மணியளவில் கம்போடியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீதரின் தற்கொலை குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரத்தில் அவரது வீடு இருக்கும் எல்லையப்பன் தெருவில் பதற்றம் நிலவியது. ஸ்ரீதரின் தற்கொலையை அவரது வழக்குரைஞர் புருஷோத்தமன் செய்தியாளர்களிடம் பேசுகையில் உறுதிப்படுத்தினார். காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் மீது நில அபகரிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அண்மையில், இவர் துபையில் பதுங்கி இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இவர் புதன்கிழமை (அக்டோபர் 4) தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் சாராய வியாபாரியாக இருந்து ரௌடியாக உருவெடுத்த ஸ்ரீதரின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. அதன்மூலம் அரசியலிலும் நுழைய நினைத்த அவர், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர் வழக்குகளின் பிடி இறுகவே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். ஆனாலும் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் காஞ்சிபுரத்தில் பல கொலைகளைச் செய்து வந்ததாக காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறங்கூற்றுமன்றம் அறிவித்தது. இதையடுத்து சென்னை அமலாக்கத் துறை ஸ்ரீதரின் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. ஸ்ரீதர், அவரது மனைவி குமாரி, மகன் சந்தோஷ்குமார், மகள் உள்ளிட்டோர் குறித்து தகவல் தெரிவிக்கும்படி விமான நிலையங்களில் சிவப்பு எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லண்டனில் பட்டம் படித்து வரும் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) புதுப்பிக்க சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை சிபிசிஐடி காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி மற்றும் தனிப்படை காவல்துறையினர், அவரை காஞ்சிபுரம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் அவரை கைது செய்யும் சூழல் ஏற்பட்டது. மேலும் விசாரணையின் அடிப்படையில், சின்ன காஞ்சிபுரம் முன்னாள் நகரமன்ற உறுப்பினர், பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல தனியார் இரு சக்கர வாகன விற்பனை அரங்க உரிமையாளர், கட்சிப் பிரமுகர் ஒருவர் என தொடர்ந்து பலரை பிடித்து விசாரணை செய்தனர். இதற்கிடையில் அமலாக்கத் துறை மூலம் காஞ்சிபுரத்தில் பிரபல துணிக்கடை நிறுவனம் ரௌடி ஸ்ரீதர் மூலம் மிரட்டி வாங்கிய இடத்தையும் முடக்கியது. இதனால் பல்வேறு வகையிலும் ஸ்ரீதருக்கு நெருக்கடி முற்றியது. இந்நிலையில், ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், கம்போடியா நாட்டில் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இறந்தது ஸ்ரீதர் தானா என உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர். ஸ்ரீதர் மீது 7 கொலை வழக்கு உட்பட 43 வழக்குகள் உள்ளன. கடந்த 2013ம் ஆண்டு அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். சட்டவிரோதமாகவும், ஆக்ரமித்தும் அவர் சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தென்னகத்தின் தாவூத் இப்ராஹிம் என்றே காவல்துறையினர் அவரைக் குறிப்பிட்டனர்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



