Show all

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்யுங்கள்! சோபியா விவகாரத்தில் அறங்கூற்றுமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை மிரட்டிய, பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்து அதன் விசாரணை அறிக்கையை மூன்று கிழமைகளுக்குள் சமர்ப்பிக்குமாறு தூத்துக்குடி அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

குற்றாலத்தில் நடைபெற்ற, பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, சென்னையிலிருந்து இண்டிகோ விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்தார் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் கனடாவில் தத்துவயியல் அறிஞர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து வரும் மாணவி லூயிஸ் சோபியா, தன் தாய் மனோகரி, தந்தை அந்தோணிசாமி ஆகியோருடன் பயணம் செய்து வந்தார். அவர் விமானத்துக்குள் தமிழிசையைப் பார்த்து, பாசிச பாஜக ஒழிக! மோடி ஒழிக! எனக் குரல் எழுப்பியதாக தமிழிசை சொல்கிறார்.

 

தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியதும், தமிழிசை தொண்டர்கள் பலத்துடன் மாணவி லூயிஸ் ஷோபியாவை மிரட்டவும் தாக்கவும் முயன்றிருக்கிறார். விமான நிலையக் காவல் துறையினர் சமாதானம் செய்து சோபியா மீட்டதாகச் சொல்லப் படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை காவல் நிலையத்தில், தன்னைப் பார்த்து, பாசிச பாஜக ஒழிக! மோடி ஒழிக! என சோபியா குரல் எழுப்பியதாக தமிழிசையை புகார் மனு அளித்துள்ளார். 

 

அதன் அடிப்படையில், சோபியாவை காவல்துறையினர் தமிழிசையன் நிர்பந்தத்தின் பேரில், கைது செய்து, அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவர் நிபந்தனையற்ற பிணையில் அறங்கூற்றுமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 

 

சோபியா மீதான புகாரை தமிழிசை திரும்ப பெறுமாறு சோபியா குடும்பத்தினர் வேண்டிக் கொண்டனர். இச்சம்பவம் நடைபெற்று ஒன்றரை மாதம் ஆன நிலையில், தற்போது வரை தமிழிசை வழக்கை திரும்பப் பெறாததால், சோபியாவின் தந்தையும் தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அறங்கூற்றுமன்றத்தின் கதவைத் தட்டியதாகக் கூறப்படுகிறது.     

தன் மகளைத் தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்த தமிழிசை உட்பட பாஜகவினர் 10 பேர் மீது சோபியாவின் தந்தை அந்தோணிசாமி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், புதுக்கோட்டை காவல்நிலையத்தினர், தமிழிசையின் அரசியல் செல்வாக்குக்கு அஞ்சி வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் எண்3 அறங்கூற்று மன்றத்தில் தமிழிசை மற்றும் அவரது தொண்டர்கள் மீது, வழி மறித்தல், அவதூறாகப் பேசுதல், கொலை மிரட்டல் மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு பதிகை செய்திருந்தார்.

 

இந்நிலையில், நேற்று மாலை இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த அறங்கூற்றுவர் தமிழ்ச்செல்வி, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரின் தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் விசாரணை அறிக்கையை மூன்று கிழமைகளுக்குள் அறங்கூற்றுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,952.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.