Show all

பலரின் எதிர் காலத்தை தீர்மானிக்கவல்ல இராதகிருட்டிண நகர் தொகுதி இடைத் தேர்தல்

ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ள இராதகிருட்டிண நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளார்.

     இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆட்சிமன்றக் குழு கூடி முடிவெடுத்து, இராதகிருட்டிண நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

     இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், இராதகிருட்டிண நகர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவேன் என்றும், சட்டமன்றஉறுப்பினராக தேர்வு செய்யப்பட்டாலும் முதல்வராக பதவியேற்க மாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.

     இன்றைய அறிவிப்பின் மூலம் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்ற கணிப்பு உண்மையாகியுள்ளது.

     இராதகிருட்டிண நகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றஉறுப்பினராக டிடிவி தினகரன் சட்டப்பேரவைக்குள் நுழையும் பட்சத்தில், அவரது அடுத்த அடி முதல்வர் பதவியை நோக்கியதாகத்தான் இருக்கும்.

     வி.கே. சசிகலா அதிமுக பொதுச் செயலராக இருக்கும் போது, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அப்போது கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் வேறு வேறாக இருக்கக் கூடாது என்று முழக்கம் எழுந்தது. இதே முழக்கம் தான் மீண்டும் எழும். மீண்டும் தமிழக முதல்வர் நாற்காலிக்கு போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

     அதிமுகவின் எதிர்காலமாக டிடிவி தினகரன் கொண்டாடப்படுவார். இது அதிமுகவுக்கு தற்போதிருக்கும் நிரந்தர தலைமையின்மை என்ற நிலையை மாற்ற உதவலாம்.

     இராதகிருட்டிண நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் தோல்வி அடையும் பட்சத்தில், கட்சியின் தலைமைக்கான பதவியே அவருக்கு உறுதியற்றதாக மாறும். தற்போது, கட்சியின் நீண்ட கால தொண்டர்களும், மூத்த தலைவர்களும் மனதுக்குள் முணுமுணுக்கும் விசயங்கள் வெளியே வரும். இதனால், அவரது துணைப் பொதுச் செயலர் பதவி கேள்விக்குறியாக மாறலாம்.

     இது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் இடைத் தேர்தல், அதுவும் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தல். இதில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தால், அது டிடிவி தினகரனுக்கு மட்டும் அல்ல, கட்சிக்கே மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படும்.

     எனவே, இராதகிருட்டிண நகர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற கடினமாக உழைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இராதகிருட்டிண நகர் மிகப் பெரும் புள்ளிகளின் தொகுதியாக மாறிவிட்டது. தற்போது எந்த மிகப் பெரும் புள்ளியின் தொகுதியாகப் போகிறது என்பதுதான் கேள்வி.

     மேலும், இராதகிருட்டிண நகர் தொகுதி மக்கள் அளிக்கும் வாக்குகள், அவர்களது தொகுதியின் எதிர்காலத்தை மட்டும் அல்லாமல், அதிமுக எனப்படும் மிகப் பெரிய கட்சியின் எதிர்காலத்தையும், மற்றொரு வகையில் தமிழகத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப் போவதாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.