Show all

பிரதமர் மோடி கோவை வருகையை ஒட்டி மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து தீவிர தேடுதல் வேட்டை

பிரதமர் மோடி கோவை வருகையை ஒட்டி மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் நக்சல் தடுப்புப் பிரிவுனர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

     கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலையின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற உள்ளது.

     இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மற்றும் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

     இதனிடையே, பிரதமர் வருகையை ஒட்டி கோவை மாவட்டத்தை ஒட்டிய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளான ஆனைகட்டு, பில்லூர், முள்ளி, பட்டி சாலை உள்ளிட்ட வனப் பகுதிகள் மற்றும் மலைவாழ் கிராமங்களில் நக்சல் தடுப்புப் பிரிவினர், சிறப்பு அதிரடிப் படையினர், மாவட்ட காவல் துறையினர் மற்றும் வனத் துறையினரும் கூட்டாக இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     மேலும், மலைப்பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வெளி நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்த விவரங்களையும் காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.   

     கோவை ஈஷா யோக மையத்தில் தலையாய பிரமுகர்களின் வருகைக்காக சிறிய அளவிலான காவல் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை முதலே ஈஷா யோக மையம் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மூன்று ஹெலிகாப்டர்கள் இறக்கும் வகையில் ஹெலிபேட்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், ஆலாந்துறை, பேரூர், நரசிபுரம், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

     பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் 200 காவல் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

     இதனிடையே விழா நடைபெற உள்ள ஈஷா யோக மையத்தில் பிரதமரின் பாதுகாப்புப்படை ஐஜி பியூஸ்பாண்டே தலைமையில் எஸ்பிஜி அதிகாரிகள் 19 பேர் செவ்வாய்க்கிழமை கோவை வந்தனர். பின்னர் அவர்கள் ஈஷா மையத்துக்கு சென்று அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.