Show all

திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம்: திமுக மீது பேரவைத் தலைவர் தனபால் குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் திமுகவினர் நடந்து கொண்டது திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என பேரவைத் தலைவர் பி.தனபால் குற்றம்சாட்டியுள்ளார்.

     சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதும் பேரவை தலைவர் தனபால் பேசியதாவது:

     பேரவையில் காலையில் நடைபெற்ற சம்பவங்களை மீண்டும் நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. இதனை மறந்து விடலாம் என நான் நினைத்திருந்தேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் நீலிக் கண்ணீர் வடிப்பதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதனால் என் மனம் மிகவும் பாதிக்கப்பட்டதால் ஒருசிலவற்றை மட்டும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக நான் வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.

     மிகமிக தாழ்த்தப்பட்ட, சாமானிய ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை இந்த உயரிய பதவியில் தொடர்ந்து 2-வது முறையாக ஜெயலலிதா அமர்த்தினார். விடுதலை பெற்ற இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த என்னை இந்த பதவியில் அமர்த்தி நான் சார்ந்துள்ள சமுதாயத்தின் விடிவௌ;ளியாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா.

     எளிய குடும்பத்தில் இருந்து வந்த நான், விதிகளுக்கு உட்பட்டு சனநாயக முறையில் மரபுகளைப் பின்பற்றி பேரவையை நடத்தினேன். அதனால்தான் மீண்டும் எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் கூட கவலைப் பட்டிருக்க மாட்டேன்.

     ஆனால், நான் சார்ந்துள்ள சமுதாயத்தை இழிவுபடுத்தும் முறையில் அவர்கள் நடந்து கொண்டதை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே கருதுகிறேன். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன மக்களை அடக்கி விடலாம், இந்த சமூகம் வளரக் கூடாது என நினைத்து திமுகவினர் செயல்பட்டிருந்தால் ப.தனபால் என்ற தனி மனிதன் அதனை எதிர்க்க என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எனது மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

     விடுதலை அடைந்து 69 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தச் சமூகம் முன்னுக்கு வரக்கூடாது, இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் உயர் பதவிக்கு வரக் கூடாது என்ற எண்ண ஓட்டத்தின் வெளிப்படாகவே இங்கே நடைபெற்ற குழப்பத்தை நான் பார்க்கிறேன்.

     பேரவை நடவடிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர். அதன்படி அவைக்கு குந்தகம் விளைவித்துவிட்டுச் சென்றுள்ளனர். பேரவையில் திமுகவினர் இருக்கும் போதே முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார். இப்போது வாக்கெடுப்பும் நடந்து முடிந்துள்ளது. முதல்வரின் தீர்மானத்துக்கு ஆதரவாக 122 பேரும்,எதிராக 11 பேரும் வாக்களித்துள்ளனர்.

     விதிகளின்படியே திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் முதல்வரின் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும். இப்போது பதிவான வாக்குகள் தெளிவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் செய்கிற அரசியலுக்கும் எனக்கும் பொறுப்பில்லை. விதிகளின்படியே பேரவையை நான் நடத்துகிறேன். வாக்கெடுப்பு முறையில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகளைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

 

     பேரவையில் நடந்த அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பேரவைத் தலைவரை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு கேவலப்படுத்தியுள்ளனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்து, இத்தோடு இந்தப் பிரச்சினையை முடித்து விடுகிறேன்.

இவ்வாறு பி.தனபால் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.